உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை..!!
உலகின் மிகப்பெரிய பாமாயில் உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. பாமாயில் இந்தோனேசியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் தாவர எண்ணெயாகும். அதேசமயம் கச்சா பாமாயில் அழகுசாதனப் பொருட்கள் முதல் சாக்லேட் வரை பரவலான பயன்பாடுகளுக்காக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உக்ரைன் விவசாய சக்தியின் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து சமீபத்திய வாரங்களில் அதிக விலையை எட்டிய பல முக்கிய உணவுப் பொருட்களில் காய்கறி எண்ணெய்களும் அடங்கும்.
இந்நிலையில் இந்தோனேசியா தற்போது பாமாயில் சமையல் எண்ணெய் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. இதனால், இந்தோனேசியா அடுத்த வாரம் முதல் பாமாயிலின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தோனேசியா ஜனாதிபதி ஜோகோ விடோடோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
சமையல் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்க்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வதை அரசாங்கம் தடை செய்கிறது. எது வரை தடை என்ற காலக்கெடு பின்னர் தீர்மானிக்கப்படும். இந்தக் கொள்கையின் அமலாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்யப்படும். இதனால் நாட்டில் சமையல் எண்ணெய் மலிவு விலையில் ஏராளமாக கிடைக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.