ஊட்டச்சத்து டானிக் ராகி!! (மருத்துவம்)
கேழ்வரகு, ஆரியம், ராகி, நச்சினி, மண்டுவா மற்றும் கேப்பை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஆங்கிலத்தில் ‘Finger Millet’ என அழைக்கப்படுகிறது. நம் முன்னோர் காலத்தில் அன்றாட உணவாக இருந்த கேழ்வரகு இன்று அரிய தானியமாக மாறிவிட்டது. ஆனால், அதிக அளவில் பூச்சிகள் மற்றும் நோய்கள் அண்டாதிருத்தல், பரந்த அளவிலான சூழலுக்கு ஏற்ற நல்ல விளைச்சல் காரணமாக உலகின் வெப்பமண்டல மற்றும் குளிர், வெப்பம் கலந்த பிராந்தியங்களில் தினைகள் முக்கியமான இடத்தை பிடிக்கின்றன.
மேலும், குறிப்பிடத்தக்க அளவு உப்புத்தன்மை, குறுகிய வளரும் பருவம், நீர் வெளியேற்றத்தை எதிர்க்கும், வறட்சியைத் தாங்கும், வளர்ச்சியின் போது குறைந்த பராமரிப்பே தேவைப்படுவதோடு, உலக மக்கள்தொகை அதிகரித்து வருவது, நீராதாரம் குறைந்து வருவது போன்ற காரணங்களாலும், எதிர்கால மனித பயன்பாட்டில் கோதுமை, அரிசியைவிட, முக்கியமான பயிராக தினை வகைகள் (Millets) இருக்கப்போகின்றன. அதிலும், ராகியின், வறட்சி சகிப்புத்தன்மை மற்றும் ஒரு திறமையான ஆக்ஸிஜனேற்ற திறன் காரணமாக எதிர்காலத்தில் மக்களின் அதிகமான பயன்பாட்டிற்கு ராகி வரப்போவது என்பதில் சந்தேகமில்லை.
ராகி என்ற கேழ்வரகு முதன் முதலில் எத்தியோப்பியாவின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டது. ராகி பயிரானது வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்த பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் அதிகமாக ராகி உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் ஆந்திரா, உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானிலும் பயிர் செய்யப்படுகிறது. உலக அளவில், சோளம், கம்பு, தினை ஆகியவற்றின் வரிசையில் கேழ்வரகு முக்கியத்துவம் வாய்ந்த பயிராக நான்காவது இடத்தில் உள்ளது. தினை வகைகளில் வரகு, சாமை, குதிரைவாலி போன்ற எல்லாவற்றுடன் ஒப்பிடும் போது ராகியில் ஐந்து அடுக்காக டெஸ்டா (Testa) இருப்பது தனித்துவமான குணமாகும். இதுவே இதில் அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதற்கும் காரணமாகிறது.
ராகியின் ஊட்டச்சத்து அட்டவணை
பொதுவாக கால்சிய தேவைக்கு பாலை அருந்தச் சொல்வார்கள். பாலில் உள்ள லேக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள் (Lactose intolerance) பாலைவிட அதிக கால்சியம் உள்ள ராகி உணவை எடுத்துக்கொள்வதால் கால்சியத்தேவையை பூர்த்தி செய்யலாம். தற்போது க்ளுட்டன் ஒவ்வாமை (Gluten allergy), செலியாக் நோய் (Celia Disease) உள்ளவர்கள் கூட ராகியை தாராளமாக சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ராகியில் அமிலசுரப்பு தன்மை இல்லாததால் செரிமானத்திற்கு நல்லது. இதில் டிரிப்டோபான் (Tryptophan), திரோயோனைன் (Threonine),வாலின் (Valine), ஐசோலூசின் (Isoleucine) மற்றும் மெத்தியோனோயின் (Methionoine) போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.
ராகியில் இருக்கும் பைட்டேட்டுகள் (0.48%), டானின்கள் (0.61%), பினோலிக் கலவைகள் (0.3-3%) மற்றும் டிரிப்சின் தடுப்பு காரணிகள் போன்றவை, நீரிழிவு எதிர்ப்பு, புற்றுநோய் கட்டிகளுக்கு எதிரான பண்புகள், வயிற்றுப்போக்கு எதிர்ப்பு, அல்சர் நோய் எதிர்ப்புத்திறன், அழற்சி எதிர்ப்பு, பெருந்தமனி தடிப்பு விளைவுகள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு காரணமாவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராகியில் இருக்கும் பாலிபினால்கள், பைட்டேட்டுகள், டானின்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டிற்கு பங்களிக்க முடியும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, முக்கியமாக வயதாவதால் வரக்கூடிய நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்ற நோய்களை எதிர்க்கும் காரணியாக இவை செயல்படுகிறது. மேலும், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்த தமனிகள் பலவீனம் (Vascular fragility), உயர் கொழுப்பு (Hypercholesterolemia), குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டின்களின் (LDLs) ஆக்சிஜனேற்றத்தைத் தடுப்பது மற்றும் இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு உடலியல் கோளாறுகளை நிர்வகிக்க ராகி பயனுள்ளதாக இருக்கும்.
ஆக்ஸிஜனேற்ற விளைவுகள் (Antioxidant property)
அதிக மொத்த பினோலிக் உள்ளடக்கம் (phenolic content) மற்றும் catechin, கல்லோகாடெசின் (gallocatechin), எபிகாடெசின் (epicatechin), குறைந்த புரோசியானிடின் (procyanidin ) போன்ற ஃபிளேவனாய்டுகளோடு, கேடலேஸ் (catalase), சூப்பர் ஆக்சைடு டிஸ்முடேஸ் (superoxide dismutase) ‘குளுதாதயோன் பெராக்ஸிடேஸ் (glutathione peroxidase) மற்றும் குளுதாதயோன் என்சைடாக்டியோஸ், குளுதாதயோன் (glutathione reductase) போன்ற என்சைமிடிக் அளவுகளும் என்சைம் அல்லாத வைட்டமின் ஈ மற்றும் சி ஊட்டச்சத்துக்களும் மிகுந்துள்ள ராகியானது உயர் ஆக்ஸிஜனேற்றத்தின் மூலாதாரமாக விளங்குகிறது. இதனால் மூப்பினால் வரக்கூடிய நோய்களை தடுக்க முடியும். வயதான தோற்றத்தையும் தள்ளிப்போட முடியும்.
அல்சருக்கு எதிரான பண்பு (Antiulcerative property)
ராகி உணவு வயிற்றில் சுரக்கும் அமிலத்தால் வாயில் உண்டாகக்கூடிய அல்சரை (mucosal ulceration) தடுக்கிறது.சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ரத்த குளுக்கோஸை குறைக்கும் விளைவு, நரம்பியல் கோளாறுகளை குறைக்கும் பண்புகளையும் கொண்டிருக்கும் ராகி, கொலஸ்ட்ரால் குறைத்தல், சீரம் கொழுப்பைக் குறைப்பதிலும் பங்காற்றுகிறது. ராகியின் மேல் தோல் குடல்-குளுக்கோஸ் உறிஞ்சுவதை தடுத்து, கணைய அமில சுரப்பை குறைப்பதால் சாப்பாட்டுக்குப்பின் உண்டாகும் ஹைப்பர் கிளைசீமியாவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
ஹீமோகுளோபின் அளவை கூட்டும் ரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கும் ராகி ஒரு அற்புதமான மருந்தாகும். ராகியில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் உள்ளது. குழந்தை பெற்ற பெண்களுக்கு உடலில் சக்தி அதிகம் தேவைப்படுகிறது. தாய்ப்பால் அருந்தும் வயதில் இருக்கும் குழந்தைகளை கொண்ட பெண்கள் ராகியினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
தோல்
இன்று பலரும் இளம் வயதிலேயே வயதானவர்களை போன்று தோற்றத்தை பெறுகின்றனர். ராகி கூழ், களி போன்றவற்றை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடலில் “மிதியோனின், லைசின்” போன்ற வேதி பொருட்கள் அதிகம். இதன் காரணமாக தோலில் சுருக்கங்கள் ஏற்படுதல் குறைந்து தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது.
எலும்பு தேய்மானம் குறையும்
வயதானால் எலும்புகள் தேய்மானம் அடைவது இயற்கை. கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் வயதானவர்களுக்கும், 45 வயதை தாண்டிய மாதவிடாய் கடந்த பெண்களுக்கும் ஏற்படும் எலும்புத் தேய்மானம் குறையும், மேலும் ரத்தத்தில் கால்சியம் அளவை தக்க வைக்கவும் உதவுகிறது. கால்சியம் சத்து குறைபாடு இருப்பவர்களுக்கு பற்கள் உறுதியாக இருக்காது. இவர்கள் கால்சியத்தின் சுரங்கமாக இருக்கும் ராகி உணவை சப்ளிமென்ட்டாக எடுத்துக் கொள்ளலாம்.
உடல் பருமனை குறைக்கும்
ராகியில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் சில அமினோ அமிலங்களால், அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து உடற்பருமன் குறைய உதவுகிறது. இதனால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்பின் அளவை சரி செய்வதால் ரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் சமநிலை ஏற்பட உதவும்.
உடலின் கொழுப்பு அளவை பராமரிக்கிறது
ராகியில் ‘லெசித்தின் மற்றும் மெத்தியோனைன்’ போன்ற அமினோ அமிலங்கள் இருப்பதால், அது கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து வெளியேற்றி, உடலின் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
ஒவ்வாமையை தடுக்கும்
ஒரு சிலருக்கு ‘க்ளூடன் அலர்ஜி’ என கூறப்படும், கோதுமை முதலான உணவுப் பொருட்களால் உண்டாகும் வாந்தி, பேதி என ஒவ்வாமை ஏற்படும். ராகியில், ‘க்ளூடன்’ (Gluten free) இல்லாததால், இதை ஒரு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். உடல் உறுதிக்கு ராகியை சாப்பிடுவது இயற்கையாகவே உடலை ஓய்வு பெற செய்யும். மேலும் இதில் உள்ள அமிலங்கள் மனக்கவலை, மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒற்றை தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மேலும் உடலின் இயல்பான செயல்பாட்டிற்கும், சேதமடைந்த செல்களை சரி செய்வதிற்கும் ராகி உதவுகிறது.
சில குடும்பங்களில் குழந்தையின் மூன்றாவது மாதம் முதலே ராகிக்கூழ் ஊட்டத் தொடங்கி விடுவார்கள். சந்தையில் விற்கப்படும் எந்த ஒரு டின் உணவை விடவும் சிறந்த குழந்தை உணவு இது. ராகியை சுத்தம் செய்து, ஓர் இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். பின், தானியத்தை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பஞ்சுத் துணியில், பிழிந்து தெளிந்த பாலாய் பிரித்து எடுத்துக்கொள்ளவும். இந்தப் பாலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி, கூழ் செய்து குழந்தைகளுக்கு ஊட்டலாம். ராகி ஒவ்வாமை உடைய பெரியவர்களும், இந்த முறையில், ராகியின் பயனை அடையலாம்.
சமையல்கலை நிபுணர் நித்யா
நடராஜன் ராகி பிஸ்கெட் செய்முறையை இங்கே விளக்குகிறார்.
ராகி பிஸ்கெட்ஸ்
தேவையான பொருட்கள்
ராகி பவுடர் – 100 கிராம்
கோதுமை மாவு – 150 கிராம்
வெண்ணெய் – 50 கிராம்
எண்ணெய் – 50 மிலி (தேவைக்கேற்ப சேர்க்கவும்)
ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன்
வெள்ளை சர்க்கரை – 100 கிராம் (பொடித்தது)
பேக்கிங் பவுடர் – ½ டீஸ்பூன்.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து உள்ளங்கை கொண்டு தேய்க்கவும். பின் அதில் ராகிமாவு, கோதுமை மாவு, பேக்கிங் பவுடர், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின், அதில் எண்ணெய் ஊற்றி பிசையவும். அந்த மாவை கைகளால் பிடித்தால் உதிராமல் இருக்க வேண்டும். இந்த கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். பின் அதை உள்ளங்கையால் அழுத்தி வைக்கவும். பின் அந்த ரொட்டிகளை பேக்கிங் டிரேயில் அடுக்கி ப்ரீஹீட் செய்த அவனில் 15 முதல் 20 நிமிடம் வேகவைத்து எடுத்து ஆறியபின் பரிமாறவும்.