லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் இன்று கீவ் வருகை..!!
24.4.22
06.25: மரியுபோலில் வெற்றி பெற்றதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தபோதிலும் அங்கு கடுமையான சண்டைகள் தொடர்ந்து நடக்கின்றன. நகரத்தை கைப்பற்றுவதற்கான ரஷிய முயற்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன. இதனால் டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷியாவின் முன்னேற்றம் வேகம் எடுக்கவில்லை என இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
03.15: ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்கோ செல்கிறார். அங்கு அதிபர் புதினுடனும், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் உக்ரைன் சென்று அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்கிறார். இந்த சந்திப்புகளின்போது போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார்.
00.30: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு வருகை தருகின்றனர் என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.