;
Athirady Tamil News

அநாமதேயர்களின் போராட்டம்!!

0

அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்களை அநாமதேயர்கள் (anonymous) என்று கூறலாம். நெருக்கடிகளின்போது முகமூடி அணிந்து இணையப் பெருவெளியில் பிரசன்னமாகுவார்கள்.

அநியாயத்திற்கும் அராஜகத்திற்கும் எதிராக போர்ப் பிரகடனம் செய்வார்கள். ஆயுதங்கள் இல்லை. படைகளும் வியூகங்களும் கிடையாது.

உள்ளதெல்லாம் தகவல்கள் அல்லது தமது போராட்டத்தில் தகவல்களை அஸ்திரமாக பிரயோகிக்கும் ஆற்றல் தான்.

தற்போது இரண்டு போராட்டக் களங்கள் சார்ந்து அநாமதேயர்களின் பிரசன்னம் நிகழ்ந்திருக்கிறது. முதற்களம் ரஷ்யா. இரண்டாவது களம் இலங்கை.

உக்ரேன் – ரஷ்யா யுத்தத்தைப் பொறுத்தவரையில், தகவல் போரிலும் ரஷ்யா பலசாலி. எந்தத் தகவல் எவ்வாறு எங்கே செல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வல்லமை ரஷ்யாவிற்கு உண்டு.

ரஷ்யாவின் பொதுத் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஊடுருவப்பட்டுள்ளன. தமது மக்களுக்கு எதைக் காட்டக்கூடாதென்று விளாடிமிர் புட்டீன் நினைத்தாரோ, அதையெல்லாம் காட்டியிருக்கிறார்கள் அநாமதேயர்கள்.

சர்வதேச தகவல் வலைப்பின்னல் என்ற மாபெரும் வெளியைப் பயன்படுத்தி ரஷ்ய மண்ணில் நிகழ்பவற்றை அவ்வெளியின் ஊடாக வேறெங்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக புட்டீன் அமைத்த வேலியை அநாமதேயர்கள் தகர்த்துள்ளார்கள்.

ரஷ்யாவின் கணினிகளை ஊடுருவி, சீசீரிவி கமராக்களிலும், கணினி கமராக்களிலும் பதிவான காணொளிகளைத் திருடி, பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

அநாமதேயர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் அநாமதேயர்கள் யார்? இவர்கள் எந்தக் கட்டமைப்பின் கீழ் இயங்குகிறார்கள்? இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? கேள்விகளுக்கு விடைகாண முயல்வோம்.

ஒரு அநாமதேயர், யாராகவும் இருக்கலாம், அவர்களிடமுள்ள ஆயுதங்கள் கணினியும், இணையமும் தான். இணையப் பெருவெளியில் நிழலாக இயங்குவார்கள். ஒரு வலைப்பின்னலாக இணைக்கப்பட்டிருப்பார்கள்.

இந்த வலைப்பின்னலுக்கு கட்டமைப்பெல்லாம் கிடையாது. தேவையேற்படும் சமயத்தில் நிழல் உலகில் ஒன்றுகூடுவார்கள்.

அநாமதேய முகமூடிக்குப் பின்னால் இருப்பவரின் கொள்கையென்ன, கோட்பாடு என்ன என்பதை எல்லாம் அறிய முடியாது. அவர் அராஜகவாதியாக இருக்கலாம்.

கடும்போக்கு சிந்தனை உள்ளவராகக் காணப்படவும் கூடும். அவர் புரட்சியாளரா, உலகை மாற்ற நினைப்பவரா என்று கேட்டால், அதற்கும் அறுதியாக பதிலளிக்க முடியாது.

இந்த அநாமதேயக் குழு எவ்வாறு உருவானது? இதன் நதிமூலம் ‘4ஊhயn’ என்ற இணையத்தளத்தில் உள்ளது. ஒரு கருத்துப் பரிமாற்றக் களம். புகைப்படங்களையும் பரிமாறலாம்.

தமது பெயரை பதிந்து தான் பரிமாற வேண்டும் என்பதில்லை. பெயரைச் சொல்லாமல், அநாமதேயமாக, பரிமாறவும் முடியும்.

இதேகாரணத்தால், இயல்புக்கும் வழமைக்கும் மாறான, வித்தியாசமான, கேலி ததும்பும் விடயங்கள் பகிரப்பட்ட நிலையில், இந்த இணையத்தளம் மிகவும் புகழ்பெற்றிருந்தது.

‘4Chan’ இணையத்தளத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர் டொம் குரூஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சை, அநாமதேயர்கள் குழுவின் உருவாக்கத்திற்கு காரணம் எனலாம். இந்த நடிகர் சயன்டலோஜி (Church of Scientology) என்ற மதப்பிரிவை சேர்ந்தவர். மதப்பிரிவில் ஆழந்த நம்பிக்கை கொண்டவர்.

ஒரு நேர்காணலில், சயன்டலோஜி மதத்தைப் பின்பற்றுவோருக்கு அபார ஆற்றல் இருப்பதாக ரொம் குரூஸ் குறிப்பிட்டார். மரணத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்கள் பற்றிப் பேசினார்.

மதப்பிரிவிற்கு ஆட்களை சேர்ப்பதற்காக காணொளி தயாரிக்கப்பட்டது. நேர்காணல் காணொளி இணையத்தில் தீவிரமாக பரவியது. பெரும்பாலும் கேலிக்கு உள்ளானது. இது மிகவும் பலம் பொருந்திய சயன்டலோஜி திருச்சபைக்குப் பிடிக்கவில்லை.

டொம் குரூஸின் வீடியோவை இணையப் பெருவெளியில் இருந்து முற்றாக அகற்ற திருச்சபை சகல முயற்சிகளையும் எடுத்தது. காணொளிகள் சேர்த்த இணையத்தள உரிமையாளர்கள் திருச்சபையின் சட்டத்தரணிகளால் அச்சுறுத்தப்பட்டர்கள்.

இதனை ‘4Chan’ இணையத்தள பாவனையாளர்கள் தணிக்கையைத் தாண்டிய அச்சுறுத்தலாகப் பார்த்தார்கள். தகவல் அறியும் உரிமை மீதான தாக்குதலாகக் கருதினார்கள்.

ஏதோவொரு வகையில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற ‘4Chan’ இணையத்தள பாவனையாளர்கள் திடசங்கற்பம் பூண்டு பதிலடி கொடுக்க முனைந்தார்கள்.

உரிய திட்டங்களைத் தீட்டுவதற்கு இணையத்தளத்தின் கருத்துப் பரிமாற்றத் தளம் உதவியது. திறமையாளர்கள் திரண்டனர். சயன்டொலொஜி திருச்சபையின் இணையத்தளங்கள் முடங்கின.

தொலைபேசி, தொலைநகல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. திருச்சபை இணையப் பெருவெளியில் காணாமல் போனது. இணையப் பெருவெளியில் அநீதிகளைக் கட்டுப்படுத்த நிழல் இராணுவம் உள்ளது என்ற கருத்து உலக மக்கள் மத்தியில் தோன்றியது.

அநாமதேயர்களின் வலைப்பின்னலை உடைத்து, அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க எத்தனையோ பலவான்கள் முனைந்தாலும், அது சாத்தியப்படவில்லை. அந்தக் குழுவிற்கு தலைவர்கள் இல்;லை. அதிகார மையங்கள் கிடையாது. பயிற்சி வழங்கப்பட மாட்டாது.

அங்கத்துவ அடையாள அட்டை இல்லை. பொதுவாகக் கூறுவதாயின், இது பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு முயற்சி எனலாம்.

அநாமதேயர்கள் சாதித்தவை ஏராளம். குடும்ப அரசியலின் எதேச்சாதிகாரம் அராஜகம் செய்த டுனீஷிய தேசத்தில் மக்கள் புரட்சியை வலுவூட்டிய பெருமை அநாமதேயர்களை சாரும்.

2011ஆம் ஆண்டு நியூயோர்க் நகரில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், அரசியலில் பணபலத்தின் செல்வாக்கையும் இல்லாதொழிக்கக் கோரி, ழுஉஉரில றுயடட ளுவசநநவ என்ற போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைக்க வசதிகளை செய்து கொடுத்தவர்கள் அநாமதேயர்கள் தான்.

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் போராட்டத்திற்கும் அநாமதேயக் குழுவின் உதவிகள் இருந்தன. சிறுவர்களின் ஆபாசப் படங்களைப் பகிரும் இணையத்தளங்கள் மீது அநாமதேயர்கள் நடத்திய போராட்டமும் முக்கியமானது.

2015 இல் நபி பெருமானாரின் உருவத்தை கேலிச் சித்திரங்களாக வரைந்து வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலைத் தொடர்ந்தும் அநாமதேயர்கள் விரைந்து செயற்பட்டு தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஐ.எஸ்.ஐஎஸ் அமைப்பின் டுவிட்டர் கணக்குகளை முடக்கினார்கள்.

தமது அடையாளத்தை மற்றவர்கள் அறியாமல் காரியங்களை நிறைவேற்றுவதற்கு அநாமதேயர்கள் பயன்படுத்தும் மென்பொருள், உண்மையில் அமெரிக்க இராணுவத்தால் உருவாக்கப்பட்டதாகும். அது எளிதாகப் பயன்படுத்தக்கூடியது.

அநாமதேயர்களைக் குறிக்கும் முகமூடிக்குப் பின்னாலும் கதையொன்று உண்டு. இது 16ஆம் நூற்றாண்டில் வெஸ்ட் மின்ஸ்டர் அரச மாளிகையை குண்டு வைத்து தகர்க்க முனைந்த கை ஃபோக்ஸ் (புரல குழடமநள) என்பவரது முகமூடிக்கு சமமானது.

அங்கிலிக்கன் கிறிஸ்தவரான முதலாம் ஜேம்ஸ் மன்னரை இல்லாதொழித்து, கத்தோலிக்க மதப்பின்னணி கொண்ட அரசாட்சியை உருவாக்குவது கத்தோலிக்கரான கை ஃபோக்ஸின் நோக்கமாக இருந்தது. தமது முயற்சி தோல்வியடைந்த நிலையில், இந்த மனிதர் தூக்கில் ஏற்றப்பட்டார்.

பின்னாட்களில், கை ஃபோக்ஸை நினைவுகூரும் வகையில், ஆங்கில சிறார்கள் அவரது முகமூடி அணிந்து ஊர்வலம் சென்றார்கள்.

இந்த முகமூடி கதையை மையமாக வைத்து பின்னாட்களில் உருவாக்கப்பட்ட ‘ஏ கழச ஏநனெநவவய’ என்ற திரைப்படம் பெரும் புகழ் பெற்றது. இதன் பிரதான பாத்திரம், ஒரு புரட்சியாளராக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

பின்னாட்களில், கை ஃபோக்ஸின் முகமூடியை அநாமதேயர்கள் தமது சின்னமாக வரித்துக் கொண்டார்கள். அநாமதேயர்கள் செய்வதெல்லாம் சரியா, தவறா என்ற கேள்விக்கு பதில் அளிப்பது சிரமம்.

இணைவழி ஊடுருவல் என்ற முறையில் தகவல்களைத் திருடுவதன் மூலம் போராட்டம் செய்வது தான் அநாமதேயர்களின் மூலோபாயம் என்றால், பாரம்பரிய அரசியல், சமூக, பொருளாதார பெறுமானங்களுக்குள், அநாமதேயர்களின் செயல் நெறி பிறழ்ந்தது என்று என்று முத்திரை குத்தி விடலாம்.

எனினும், தற்போது அதிகாரபலம் பொருந்தியவர்கள் பெறுமானங்களை பொருட்டாகக் கருதாமல் நெறி பிறழ்ந்து நடக்கையில், அவர்களுக்கு எதிரான நூதன போராட்டம் செய்து, மனித குலத்தில் சமூக சமநீதியை ஏற்படுத்துவதற்காக தகவல்களைத் திருடுவதிலும், திருடிய தகவல்களைத் தீமைக்கு எதிராக பயன்படுத்துவதிலும் பெருந்தவறு ஏதும் இல்லை.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.