வரலாறு காணாத பாதுகாப்பை மீறி ஜம்முவில் குண்டுவெடிப்பு- குல்காமில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!!
தேசிய உள்ளாட்சி அமைப்பு தினத்தையொட்டி பிரதமரின் வருகையால் ஜம்மு காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. எல்லை பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வரலாறு காணாத பாதுகாப்பையும் மீறி ஜம்முவில் இன்று குண்டுவெடிப்பு நடந்தது. பிரதமர் மோடி அங்கு செல்லும் முன்பு இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் ஜம்முவின் சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே தற்கொலை படை தாக்குதல் நடத்த முயன்ற 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியை என்.ஐ.ஏ. தலைவர் குல்தீப்சிங் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, குல்காம் அருகே உள்ள மிர்ஹாமா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றனர் அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினர் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இதற்கிடையே சஞ்சுவான் ராணுவ முகாம் அருகே நடந்த என்கவுண்டர் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளுக்கு இவர்களுக்கு உதவியதாக கூறப்படுகிறது.