முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றார் பிரதமர் மோடி
புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது 92-வது வயதில் காலமானார். இவரது நினைவாக ஆண்டுதோறும் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. நமது தேசத்திற்கும் சமூகத்திற்கும் தன்னலமற்ற சேவை செய்பவர்களை கவுரவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று நடைபெற்ற விழாவில், அவருக்கு விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தனக்கு கிடைத்த இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். இசையானது தாய்மை மற்றும் அன்பின் உணர்வைத் தருகிறது. தேசபக்தி மற்றும் கடமையின் உச்சத்திற்கு இசை உங்களை அழைத்துச் செல்லும். இசையின் சக்தியை, லதா மங்கேஷ்கரின் வடிவில் பார்த்த நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.