கொத்து கொத்தாய் பரவும் கொரோனாவை தடுக்க சீனா அரசு தீவிரம்..!!
சீனாவில் கொத்து கொத்தாக கொரோனா பரவுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. அங்கு ஷாங்காய் நகரில் ஒரே நாளில் 39 பேர் தொற்றால் பலியாகி உள்ளனர்.
சீனாவின் உகான் நகரம்தான் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை உலகுக்கு வழங்கியது. இன்றைக்கு அதே சீனா ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலையில் சிக்கி உள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் சீனாவின் மையப்பரப்பில் 21 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுளளது. இவர்களில் 1,566 பேர் தவிர்த்து மற்றவர்களுக்கு அறிகுறிகள் இல்லை.
சீனாவின் பொருளாதார தலைநகர் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில்தான் அறிகுறியற்ற கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 39 பேர் பலியாகி உள்ளனர். இந்த நகரம் கொரோனா தொற்றின் மையமாக உள்ளது.
பீஜிங் நகரில் 10 நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவியதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
இதுபற்றி பீஜிங் நோய் தடுப்பு, கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குனர் பாங் சிங்கூவோ கூறும்போது, “கண்டறியப்படாத உள்ளூர் பரவுதல்கள் ஒரு வாரத்துக்கு முன்பு பீஜிங் நகரில் தொடங்கின. பள்ளிகள், சுற்றுலா குழுக்கள், குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்கு மறைக்கப்பட்ட பரிமாற்றங்கள் இருந்தன. பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு பின்னணியில் இருந்தும், பரந்த அளவிலான செயல்பாடுகளில் இருந்தும் வந்தவர்கள்” என குறிப்பிட்டார்.
கிளஸ்டர் என்று அழைக்கப்படுகிற அளவில் கொத்து கொத்தாக கொரோனா பரவல் மாறி விடாமல் இருக்க சீன அரசு நடவடிக்கை எடுக்கிறது. உஷாராகவும் உள்ளது. இதுபற்றி பீஜிங் நோய் தடுப்பு, கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குனர் பாங் சிங்கூவோ கூறுகையில், “சுற்றுலா குழுக்களில இடம்பெற்ற முதியோர், கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் கிளஸ்டர் அடையாளம் காணப்பட்ட பள்ளியில் பணிபுரியும் நபர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்” என தெரிவித்தார்.
பீஜிங் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் காய் குய், மேயர் சென் ஜினிங் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கொரோனா பரவலை தடுக்க வாரம் இரு முறை கூடி ஆலோசனை நடத்துகிறார்கள்.