யாழ். முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் யாரும் கண்டுகொள்வதில்லை!!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் மக்கள் பணிமனை உறுப்பினர்களுக்கும் இடையே சந்திப்பொன்று இன்றைய தினம் யாழில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பில் சுபியான் மெளளவி கருத்து தெரிவிக்கையில்:
இன்று தூதுவரை சந்தித்தோம். 1990 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லீம்கள், இன்று வரை முழுமையாக மீள் குடியேற்றப்படவில்லை. இதில் எவருக்கும் அக்கறை இல்லை. 2,118 பேர் மீள் குடியேற்றத்துக்கு பதிவு செய்துள்ளனர்.
அவர்களில் 800 பேர் தற்போது குடியேறியுள்ளனர். அவர்களில் 285 பேர் வரையில், காணிகள் இல்லாமல், நிரந்தர பதிவு இல்லாமல் இருக்கின்றனர். இன்னமும் 4 ஆயிரம் பேர் மீள குடியேறுவதற்கு பதிவு இல்லாமல் இருக்கின்றனர்.
ஆகவே யாழ்ப்பாண முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் எவருக்கும் அக்கறை இல்லை. அன்று இரண்டு மணித்தியாலம் இடம்பெற்ற இனக்கலவரத்தில் நாம் வெளியேற்றப்பட்டோம். இன்று வரை மீள் குடியேறமால், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இருக்கின்றோம் என்பதை தூதுவருக்கு தெரியப்படுத்தினோம்.- என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”