;
Athirady Tamil News

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்ப் பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன் !! (வீடியோ)

0

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது எனது கருத்து என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை நாங்கள் கட்டாயம் ஆதரிக்க வேண்டும். ஜனாதிபதி அங்கு இருப்பதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடையாது. ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து வெளியேற்றுவதாக இருந்தால் அதற்கு பதிலாக யார் வரப் போகிறார்கள் என்ற கேள்வி உள்ளது. அதற்கு என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்த்துக்கொண்டே நடவடிக்கையில் இறங்கவேண்டும். நாட்டிலுள்ள ஸ்திரத்தன்மை இல்லாது போய்விட்டால் பொருளாதார ரீதியான மீள்கட்டுமானம் என்பது பாதிக்கப்படும். இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

தமிழ் கூட்டமைப்பு கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சலுகைகளைப் பெற்றிருந்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு இந்த சலுகைகள் கிடைக்கவில்லை. இவர்களை வெளியேற்றிவிட்டு யாரை நம்ப போகின்றோம் என்ற கேள்வி இருக்கிறது. ஆகவே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுக்கப் பட்டால் அவருக்கு எதிராக செயற்பட வேண்டும் என்பதே எனது கருத்து.
ஜனாதிபதி என்பதில் அவர் செய்த பிழைகள் இருக்கின்றன. அதேபோல பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது செய்த பிழைகள் பல இருக்கின்றன.ஆனால் ஜனாதிபதி என்ற முறையில் அவர் செய்த பிழைகள் என்று எடுத்து பார்ப்போமானால் முதலாவதாக பதவிக்கு வந்தவுடன் 2019 நாட்டுக்கு பெற வேண்டிய வரிகளை குறைத்து தனது ஆதரவாளர்களுக்கு நன்மையை கொடுக்கும் வண்ணம் பெருவாரியான வருமானத்தை இல்லாமல் செய்தது குற்றம்.
மக்களுடன் கலந்தாலோசிக்காது நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் உடனடியாக அமுல்படுத்திய உரத் தடை நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் காரணத்தினால் நெல் அறுவடை நன்றாக குறைந்திருக்கின்றன.
வெளிநாட்டில் இருந்து அரிசியை இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதி செய்த பலவிதமான நடவடிக்கைகள் நாட்டை சீரழிக்கும் வகையில் அமைந்தது.

ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வந்தால் அதனை ஆதரிக்க வேண்டும். உண்மையும் இதுதான். அவரது கையாலாகாததனத்தினாலேயே நாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”


You might also like

Leave A Reply

Your email address will not be published.