;
Athirady Tamil News

சாராவை இனங்காண டீஎன்ஏ பரிசோதனை !!!

0

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை அம்பாறை பொது மயானத்திலிருந்து இன்று (27) எடுத்து டீஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்கு கல்முனை நீதவான் நீதிமன்றம், நேற்று (26) அனுமதி வழங்கியது.

புதைக்கப்பட்ட சடலங்களில், சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் சடலமும் உள்ளதா என்பதை பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துவதற்காகவே உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளன.

அம்பாறை நீதவான் உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று சஹ்ரான் ஹாஷிமின் தலைமையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று சஹ்ரானின் சகோதரரான மொஹமட் ரில்வான், சாய்ந்தமருது பகுதியில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதில், சிறுவர்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

எனினும், கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்த மொஹமது ஹஸ்தூன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்றழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனின் உடற்பாகங்கள் அங்கு காணப்பட்டமை தொடர்பில், டீஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்களை மீண்டும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான அனுமதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் கோரப்பட்டதற்கு அமையவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.