கொரோனா 4-வது அலையை எதிர்கொள்ள தயார்: பசவராஜ் பொம்மை..!!
இந்தியாவில் 1-வது, 2-வது மற்றும் 3-வது கொரோனா அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது.
இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசதங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும், கொரோனா பரிசோதனை பணிகளும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், கர்நாடகத்திலும் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் 4-வது அலை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. 50-க்கு கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்பு சமீபநாட்களாக 100-ஐ தாண்டி பதிவாகி வருகிறது.
இதனால் பஸ், ரெயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவது கட்டாயம் என்றும், சமூகவிலகலை கடைப்பிடிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக அரசு கொரோனா 4-வது அலையை தடுக்கும் வகையில் அனைவரும் தடுப்பூசிபோட்டுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் அரசு எடுத்த தீவிரமான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா 3-வது அலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. கொரோனா 4-வது அலை பரவும் என்று நிபுணர்கள் அறிக்கை வழங்கியுள்ளனர். அதனால் அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் வதந்திகளை நம்பக்கூடாது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
கான்பூர் ஐ.ஐ.டி. குழு, வருகிற ஜூன் மாதம் கொரோனா 4-வது அலை பரவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் ஜூனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அதாவது மே மாதமே கொரோனா 4-வது அலை பரவும் என்று அந்த குழு தகவல் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு முதல், இரண்டு, மூன்றாவது அலைகளின்போது அந்த குழு வழங்கிய அறிக்கையில் கூறிய அம்சங்கள் ஏறத்தாழ சரியாக இருந்தது.
2-வது மற்றும் 3-வது டோஸ் போட்டு கொள்ளாதவர்கள் உடனடியாக அதை போட வேண்டும். அப்போது தான் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும். 60 வயது மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது. இன்னும் 15 லட்சம் பேர் 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இலவசமாக தடுப்பூசி வழங்கினாலும் அதை போட்டுக்கொள்ள அலட்சியமாக காட்டுவது ஏன்?.
கொரோனா 4-வது அலை வருமா? வராதா? என்பது யாரும் யோசிக்க தேவை இல்லை. கொரோனா பரவினாலும் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். பொதுமக்கள் அரசு பிறப்பிக்கும் வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மக்களின் நலன் கருதியே கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கர்நாடகத்தை பொறுத்தவரையில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. அதனால் பொதுமக்கள் பீதியடைய தேவை இல்லை.
இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.
இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விஜயாப்புராவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சில நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இந்தியாவை ஒட்டியுள்ள சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 8 நாடுகளில் பாதிப்பு அதிகரித்துள்ளது. அதே போல் நாட்டில் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கர்நாடகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளோம். சமூக விலகலை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும். மேலும் 4-வது அலையை எதிர்கொள்ள அரசு அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளது. எனவே பொதுமக்கள் ஆதங்கப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினால் போதும். கொரோனா 3-வது அலை மராட்டியம், கேரளாவில் முதலில் அதிகரித்தது.
பிரதமர் மோடி கொரோனா பரவல் தடுப்பு குறித்து நாளை (இன்று) முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.