போலி ஆதார், பான் எண் கொண்டு ரூ.11 கோடிக்கு மேல் இழப்பீடு-போலீசார் வழக்குப்பதிவு..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் வதோரா- மும்பை விரைவுச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தானேவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தானே மாநிலம் பிவாண்டி தாலுகாவில் உள்ள நந்திதானே கிராமத்தில் 8 பேருக்கு சொந்தமான நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு பிவாண்டியில் உள்ள துணைப்பிரிவு அலுவலகத்தில் இழப்பீடு வழங்கப்பட்டது. பின்னர் ஆவணங்கள் சரிபார்ப்பின்போது சிலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளின் போலி நகல்களை சமர்ப்பித்து இருந்தது தெரியவந்தது. இதன்மூலம் ரூ.11.66 கோடி இழப்பீடு பெற்றுச் சென்றதாக சாந்தி நகர் காவல் நிலைய போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.