ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் சென்றடைந்தார் ஐ.நா. பொது செயலாளர்..!!
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதத்துக்கு மேலாகிறது. ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு வெகுஜன புதைகுழியில் சுமார் 300 பேர் புதைக்கப்பட்டதாகவும், அந்த நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்நகர மேயர் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு தெருக்களில் வைத்துள்ள குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களின் உடல்கள் போடப்பட்டிருப்பது படங்களுடன் வெளியாகி நெஞ்சை உலுக்குவதாக அமைந்தது.
புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டிருப்பதற்கு ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே, உக்ரைன், ரஷியா இடையிலான போரை நிறுத்துவதற்காக ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்குச் செல்ல ஐநா சபை பொது செயலாளர் திட்டமிட்டிருந்தார்.
அதன்படி, ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று ரஷியா சென்றார். அங்குவெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவை சந்தித்தார்.
இந்நிலையில், ரஷியா பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று உக்ரைன் சென்றடைந்தார். அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு மந்திரியை சந்திக்க உள்ளார்.