காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல், பிரியங்கா பெயர்களை பரிந்துரைக்கவில்லை- பிரசாந்த் கிஷோர் பேட்டி..!!
2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தேர்தல் வியூக அறிக்கையை பிரசாந்த் கிஷோர் சமர்பித்தார். அதற்கு முன்னதாக கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக பிரசாந்த் கிஷோருடன் சோனியா காந்தி பல முறை ஆலோசனை நடத்தினார்.
இதை தொடர்ந்து 2024 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்ட குழுவை சோனியா நியமித்தார். அதோடு பிரசாந்த் கிஷோரையும்காங்கிரசில் இணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அதை அவர் நிராகரித்தார்.
இந்நிலையில் தனியார் செய்தி சேனலுக்கு பிரசாந்த் கிஷோர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தற்போதைய காங்கிரஸ் தலைமையும் நானும் கட்சியின் எதிர்கால திட்டம் தொடர்பாக பல விஷயங்களை ஒப்புக் கொண்டோம். அவர்களால் அதைச் செய்ய முடியும், அவர்களுக்கு அவ்வளவு பெரிய தலைவர்கள் உள்ளனர். கட்சியில் எந்தப் பங்கையும் நான் விரும்பவில்லை
காங்கிரஸ் தலைமை பதவி தொடர்பான எனது ஆலோசனையில் ராகுல் காந்தி, பிரியங்கா பெயர்கள் இல்லை. தலைமை பதவிக்கு மூன்றாவது நபர் பெயர் பரிந்துரைக்கப்பட்டதா என்பதை தனிப்பட்ட முறையில் என்னால் சொல்ல முடியாது.
காங்கிரஸ் கட்சிக்கு பிகே (பிரசாந்த் கிஷோர்) தேவையில்லை, கட்சியே தனது முடிவுகளை எடுக்கலாம். ஊடகங்கள் எனது படத்தை தேவையை விட பெரிதாக காட்டுகின்றன. காங்கிரஸிடம் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அதை செயல்படுத்துவதா, வேண்டாமா என்பது அவர்களின் விருப்பம்.
ராகுல் காந்தி தனது நண்பர், பாஜகவின் தாக்குதல்களால் சிதைந்து போன ராகுல் காந்தி மீதான மதிப்பீடுகளை மீண்டும் உருவாக்க முடியும். 2002ல் இருந்து இப்போது வரை பிரதமர் மோடியின் மீதான மதிப்பீடு குறித்த மாற்றத்தைப் பாருங்கள். நிச்சயமாக அது சாத்தியமே.
காங்கிரசின் எதிர்கால திட்டத்தை தயாரிப்பதற்கும் பரிந்துரைப்பதற்கும் பணம் எதுவும் வாங்கவில்லை.காங்கிரஸ் மிகவும் ஆழமாக வேரூன்றிய கட்சி.(பாராளுமன்ற தேர்தலில்) அவர்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்வது தவறாகும். ஆனால் அவர்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு யார் சவால் விடுவார்கள் என்று தெரியவில்லை.மாநிலத் தேர்தல் முடிவுகள் மூலம் மக்களவைத் தேர்தலைக் கணிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.