பணவீக்கத்திற்கு தீர்வு காண வேண்டும்- பிரதமருக்கு, ராஜஸ்தான் முதலமைச்சர் கோரிக்கை..!!
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காணொலி மூலம் பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
கொரோனா தொடர்பாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், ஐந்து முதல்வர்களுக்கு மட்டுமே கருத்து தெரிவிக்க வாய்ப்பு கிடைத்தது. இறுதியில், பிரதமர் திடீரென பணவீக்கம் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி குறிப்பிட்டார்.
மேலும் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்கள் மீது அவர் குற்றம் சாட்ட முயன்றார். நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கியமாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும், அதன் விளைவுகள் மாநிலங்களில் பிரதிபலிக்கின்றன.
பணவீக்கம் பிரச்னை தொடர்பாக, அனைத்து முதல்வர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி, அனைவரின் கருத்தையும் கேட்கும்படி, பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.
இதன் மூலம், மாநிலங்களும் தங்கள் தரப்பை கருத்தை முன்வைக்க வாய்ப்பு கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள மக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே, அனைத்து முதல்வர்களுடனும் ஒரு கூட்டத்தை நடத்தி தீர்வுகளை கண்டறிவதன் மூலம் சாமானியர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.