#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: கீவ் நகர குடியிருப்புகள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்..!!
29.4.2022
03.40: உக்ரைன் கீவ் நகரில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஐ.நா.சபையை அவமதிக்கும் செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஐ.நா.பொதுச் செயலாளர் வருகை தந்துள்ள நிலையில், கீவ் பகுதி மீது ஐந்து ஏவுகணைகள் பறந்து வந்து தாக்கியதாகவும், இது ஐ.நா.அமைப்பு உள்பட அனைத்து பிரதிநிதித்துவத்தையும் அவமானப்படுத்தும் ரஷிய தலைமையின் முயற்சி என்றும் தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
02.20: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகள் மீது ரஷிய படைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒருவர் கொல்லப் பட்டார். பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் இரண்டு கட்டிடங்கள் சேதடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் சென்றுள்ள ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், அந்நாட்டு அதிபருடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த ஒரு மணி நேரத்திற்கு பின்பு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
01.40: ரஷ்யா, தான் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து தானியங்களைத் திருடியதாக உக்ரைன் குற்றம் சாட்டி உள்ளது. இது குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு உக்ரைனின் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள விவசாயிகளிடமிருந்து பயிர்களை ரஷிய படைகள் அபகரித்துள்ளதாகவும், தானியங்களை திருடியதாகவும்தெரிவிக்கப் பட்டுள்ளது. உக்ரைன் இந்த குற்றச்சாட்டிற்கு ரஷியா எந்த பதிலும் அளிக்கவில்லை.
12.30: ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தோல்வி அடைந்து விட்டதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். உக்ரைன் சென்றுள்ள அவர், தலைநகர் கீவ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். இருநாடுகள் இடையே போரை தடுக்கவும், அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், அனைத்து முயற்சிகளையும் செய்ய தவறி விட்டது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
28.4.2022
21.00: உக்ரைன் புறநகர்ப் பகுதிகளில் ரஷியாவின் தாக்குதலால் கடுமையாக சேதமடைந்த பகுதிகளில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு ரஷியா ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், எந்த போர் நடந்தாலும் பொதுமக்கள் அதிக விலை கொடுக்கிறார்கள் என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
20.30: உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்புவது தொடர்பாக ஜெர்மனி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தீர்மானத்திற்கு ஆதரவாக 586 உறுப்பினர்களும், எதிராக 100 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
20.00: ரஷிய பகுதி மீது எந்தவொரு தாக்குதல் நடத்தினாலும் கடுமையான ராணுவ பதிலடி கொடுக்கப்படும் என ரஷியா எச்சரித்துள்ளது.
16.00: உலக நாடுகள் ரஷியாவை உக்ரைனை விட்டு வெளியேற்ற உதவ வேண்டும் என பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் உக்ரைனுக்கு எதிரான வெற்றி ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் சொல்லமுடியாத துயரத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.