;
Athirady Tamil News

சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே…!!

0

இலங்கைத் தீவில் நாங்கள் நாங்களாக வாழுகின்ற உரிமையும் நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும் எப்போது இருக்கின்றது என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் கனகராஜா மகேந்திரராஜா அவர்களது நினைவு நிகழ்வும் பொற்கால மலர் என்ற நூல் வெளியீட்டு விழாவும் இன்று (29) நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள். பச்சிளம் பாலகர்கள் கூட இறங்கிப் போராடுகிறார்கள். இந்தப் போராட்டத்தில் உங்களுடைய பங்கு என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார்.

எங்கள் உறவுகள் தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த எங்களுடைய சகோதரிகள் தாய்மார்கள் தங்களுடைய தன்னுடைய கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சிங்கள சகோதர சகோதரிகளால் பதில் கூற முடியுமா என்று கேட்டிருந்தேன்.

ஆயிரமாயிரம் மனித உயிர்களை நாங்கள் இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம்.

சிங்கக் கொடியின் கீழ் எங்களையும் ஏற்று அரவணைக்கும் எண்ணத்தை சிங்கள சகோதர்ர்கள் கொண்டுள்ளார்களா? அல்லது எங்களையும் இந்த நாட்டினுடைய பிரஜைகளாக சிங்கள மக்கள் ஏற்றுள்ளார்களா ? அதை கூட வெளிப்படையாகச் சொல்லுகின்ற ஆற்றல் ஒரு சிங்கள சகோதரர்களுக்கு அல்லது சகோதரிக்கு ஏன் இன்னும் வரவில்லை. தமிழர்களுடைய வரலாற்று தாயகம் வடக்கு கிழக்கு என்று சொல்வதற்கு ஏன் இன்னும் ஒரு சிங்களச் சகோதரர்களால் முடியவில்லை.

நாங்கள் இன்னும் சிங்கக்கொடிக்குள் அரவணைக்கப்படவில்லை. அதுவும் எங்களுடைய கொடியாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் உங்களுக்கு இன்னமும் வரவில்லை.

அதனால் தான் நாங்கள் இன்றும் அந்த போராட்டத்திற்கான எண்ணங்களை கொண்டிருக்கவில்லை. அமெரிக்க அரசு கூட ஆய்வு செய்கிறது. நான்கு நாட்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து இதனை ஆய்வு செய்கிறார்கள். ஏன் தமிழர்கள் போராடவில்லை என்று பல நாடுகள் கேட்கின்றன.

நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட போது யாரும் கேட்கவில்லை.

இன்று ஒரு மனிதன் கொள்ளப்படுகின்ற போது உலகம் கேட்கின்ற போது ஒரு ஆயிரம் பேர் கொல்லப்பட்ட போதும் யாரும் பேசவில்லை. கிளிநொச்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலக அதிகாரிகளை எமது மக்கள் இந்த இடத்திலிருந்து செல்ல வேண்டாம் செல்ல வேண்டாம் என்று கேட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் சென்றார்கள் நாங்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்ட, கொலை செய்யப்பட்ட இந்த வரலாறுகள் எங்கள் முன்னால் இருக்கின்றது.

இன்று போராட்டத்தில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு எதை சொல்கின்றனர் போராட்டத்தில் ஈடுபடும் ஒரு பகுதியினர் சொல்லுகின்றார்கள் இது ஒரு சிங்கள பௌத்த நாடு என்று என்றும் அதனை நாங்கள் நிராகரிக்க மாட்டோம் என்றும் அதற்குள்ளிருந்து தான் நாங்கள் போராடுகின்றோம் என்று குறிப்பிடுகின்றார்கள்.

மகாவம்சத்தில் ஊறிப்போன நீங்கள் இந்த பௌத்த சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா?

நாங்கள் எத்தனையோ ஆண்டுகள் இந்த மண்ணிலே நசுக்கப்பட்டவர்கள். மீண்டும் மீண்டும் சாம்பலிலே இருந்து எழும் ஒரு இனமாக எங்களிடம் இருந்த திறமைகளுடன் இந்த மண்ணில் காலூன்றி இருக்கின்றோம். நாங்கள் இந்த பொருளாதார தடைகள் ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் மண்ணெண்ணெய் வாங்கி அதனை சிக்கனமாக வைத்து வாழ பழகி பக்குவப்பட்டவர்கள்.

எங்களுடைய மொழி ரீதியாக கலாச்சார ரீதியாக பண்பாட்டு ரீதியாக தோன்றி வளர்ந்தவர்கள் . விஜயனின் வருகைக்கு முன்னரே நாங்கள் வாழ்ந்த இனம். ஆகவே நாங்கள் இந்த மன்னனுடைய பூர்வீகக் குடிகள். இன்று நாங்கள் எங்கள் இறைமையை இழந்து சுதந்திரத்தை இழந்து நாங்கள் இப்போதும் அடிமைகளாக எங்களைச் சுற்றி ஒரு ராணுவ வேலிக்குள் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் நாங்களாக இந்த மண்ணிலேயே வாழுகின்ற உரிமையும், நீங்கள் நீங்களாக வாழுகின்ற உரிமையும் இருக்கின்றது. என்பதை நீங்கள் எப்போது வெளிப்படையாக பேச ஆரம்பிக்கும் போதோ அல்லது அதை ஏற்றுக்கொள்ள துணிகின்றீர்களோ அப்போதுதான் இந்த நாட்டினுடைய பொருளாதாரம் அரசியல் முன்னேற்றம் என்பது சாதாரணமானதாக மாறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.