பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினர், யாழ்.மாநகர முதல்வர் கலந்துரையாடல்!! (படங்கள்)
பிரான்ஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுக்குமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கருத்து தெரிவித்த யாழ்.மாநகர முதல்வர், நாங்கள் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம் ஒன்று தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினைப் பெற்றுதருவதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும். இரண்டாவதாக 30 வருட போரின் காரணமாக அழிக்கப்பட்ட எமது பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை நீங்கள் வழங்கவேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
அத்துடன் தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்கள் தமிழருக்கு நீதியான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி முறையிலான ஆட்சி அதிகாரத்தினை இலங்கை அரசு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நிதி உதவிகளை அளிக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை நீங்கள் பிரயோகிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரஞ் பாராளுமன்ற செயலாளார் ஜோன்ஸ் பிரான்சுவா தாங்கள் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொள்ளுகின்றோம். பிரரான்சில் உள்ள பல மாநகர சபைகள் இனப்படுகொலைத் தீர்மானங்களை நிறைவேற்றி அதனை எமக்கு அறியத்தந்திருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் தற்பேர்து தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு இலங்கையில் ஒரு நீதியான அரசியல் தீர்வைப்பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் பாராளுமன்றம் தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படும் என்று தெரிவித்தார்.
தமிழ்மக்களின் அரசியல் பொருளாதார சமூக மேம்பாடுகள் மற்றும் மாநகர சபையின் செயற்பாடுகள் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரஞ் பாராளுமன்ற செயலாளார் ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கு யாழ்.மாநகர சபையின் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவமும் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஞ் பாராளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவா, யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”