;
Athirady Tamil News

இலங்கையின் நெருக்கடி குறித்து தமிழர் தரப்பு கூடி ஆராய்ந்தது!!

0

வட, கிழக்கு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பிற்கான ஒருங்கிணைப்புக் குழுவை அங்குரார்ப்பணம் செய்து தற்போதைய இலங்கைத் தீவின் நெருக்கடியில் தமிழரின் வகிபாகம் தொடர்பாக ஆராய்ந்தனர்.

வடக்கு கிழக்கு சார்ந்த சைவ ஆதீன முதல்வர்கள், கத்தோலிக்க குரு முதல்வர்கள், சமய, சமூக, தொழிற்சங்க பிரதிநிதிகள் பல்கலைக்கழகம் சார் பேராசிரியர்கள், மாணவ பிரதிநிதிகள், மருத்துவர்கள், பொறியியலாளர், வங்கியாளர்கள், ஊடகவியலாளர், கல்விப்புலம் சார்ந்தோர் என பல்துறை ஆளுமை சார் செயற்பாட்டாளர்கள் தமது கருத்துக்களை பரிமாறினர்.

தமிழ் தேசியம் சார்ந்து பொருளாதார நெருக்கடியை எவ்வாறு அணுகுவது, சிங்கள மக்களிற்கும் சர்வதேசத்திற்கும் இந்த தருணத்தில் தமிழ் மக்கள் ஓர் திரட்சியாக எவ்வாறு தமிழரின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை கொண்டு சேர்ப்பது, பொருளாதார பிரச்சனைக்கு மூலவேர்க் காரணமான தமிழ் மக்களின் மீதான அடக்கு முறைகளிற்கான தீர்வை பெற்றுக்கொள்ள சிங்கள மக்களிடையே மன மாற்றத்தை தூண்டல், சுயசார்பு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் என பல கோணங்களில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இறுதியில், வடகிழக்கு தழுவிய மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒருங்கிணைப்புக் குழு தெரிவு செய்யப்பட்டது.

தொடர் கலந்துரையாடல்கள் வாயிலாக தென்னிலங்கை சிங்கள மக்களிற்கான செய்தியான உங்களை புரிந்து கொள்கின்றோம் எங்களை புரிந்து கொள்ளுங்கள் எனும் தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒருமித்த குரலாக கொண்டு சேர்க்கும் வேலைத்திட்டங்களை பல தளங்களில் தொடர்ச்சியான கருத்தாடல்களுடன் முன் கொண்டு செல்வதாக தீர்மானிக்கப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.