உரிமைகள் வெல்லவும் – இடர்கள் நீங்கவும் – உறுதி கொள்வோம்!!
சகல இன மத மக்களும் சமத்துவம் என்ற உரிமைகள் வெல்லவும், சம கால இடர்கள் நீங்கி சகல மக்களும் மகிழ்வுற்று வாழவும், தமிழர் தேசம் தலை நிமிரவும், உழைக்கும் மக்களின் வாழ்வு விடியவும், உழைப்பவர் தினத்தில் உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது மேதின செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மேதின செய்தியில்,..
“இன்று உழைப்பவர் தினம், உழைக்கும் மக்கள் உரிமை கேட்டெழுந்து தமதுரிமை பெற்று தலை நிமிர்ந்த நாள். உலக உழைக்கும் மக்களே,.. ஒடுக்கப்படும் தேச மக்களே, ஒன்று படுங்கள் என்ற அறை கூவலை ஏற்று, தமிழர் தேசத்தின் விடியலுக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் உறுதி கொண்டு அன்றே எழுந்து நின்றர்வர்கள் நாம்.
புலித் தலைமையின் தனித்தலைமை வெறியாட்டத்தில் எமது நீதியான உரிமை போராட்டம் திசை மாறி அழிவு யுத்தமாக மாறிச்சென்ற அவல நிலையில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து தீர்க்கதரிசனமாக தேசிய நல்லிணக்க பாதையை தெரிவு செய்தவர்கள் நாம்.
ஆனாலும், இலங்கை இந்திய – ஒப்பந்த நடைமுறைகளில் நாம் பங்கெடுத்தவர்கள் அல்ல, பாதை மாறினாலும், எமது பயணம் நின்றுவிடவில்லை.
எந்த இலட்சிய கனவுகளுக்காக அன்று நாம் போராடியிருந்தோமோ, அதே இலட்சிய கனவுகளுக்காக்காக, அரசியல் அதிகாரங்களை வென்றெடுப்பதன் ஊடாக, அரசுடன் பேசி தீர வேண்டிய பிரச்சினைகள் பலவற்றையும் நாம் போதிய அரசியல் பலமின்றியே முடிந்தளவு தீர்த்து வைத்து வருகின்றோம்.
உழைக்கும் மக்களின் உரிமைகளை,. வறிய மக்களின் வாழ்வாதார எழுச்சியை, நிலமற்ற, வீடற்ற மக்களின் பிரச்சினைகளை,.. சமூக சமத்துவ நீதியை, பெண்களின் சமத்துவ உரிமையை,..வேலையற்ற இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்புகளை, எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய சிந்தனையை,. அபிவிருத்தியில் தமிழர் தேசத்திற்கான சமத்துவ உரிமையை, எமது எண்ணங்களில் இடையறாது சுமந்து செயலாற்றிய படியே அர்த்தமுள்ள ஓர் அரசியல் தீர்விற்காகாகவும் நாம் யதார்த்தமாக சிந்தித்து உழைத்தும் வருகின்றோம்.
இத்தகைய பன்முகச்சிந்தனை செயற்பாடுகளையும், அன்றாட இடர் தீர்ப்பு, அபிவிருத்தி, அரசியலுரிமை, என்ற எமது உயரிய இலட்சிய செயற்பாடுகளையும் உதறித்தள்ளி விட்டு, வெறும் பேச்சளவில் மட்டும் அரசியலுரிமை என்ற வேற்று வேட ஒற்றைப்புத்தியில் தாமும் மயங்கி, மக்களையும் மயக்க எத்தனிப்பவர்கள் இன்று, விலை வாசி உயர்வென்றும், மின்சாரம், எரிபொருள் இல்லையென்றும் வெற்று வேடக்கூச்சலிடுவது வேடிக்கையானது.
உணவும் தேவை,. உரிமையும் தேவையென எமது மக்களின் உணர்வெழுச்சியாக உறுதியுடன் உழைத்துவரும் எம்மை சலுகைகளுக்காக கையேந்துவோர் என பரிகாசம் செய்தவர்கள், சோறா? சுதந்திரமா? என கேட்ட போது, சோறு வேண்டாம், சுதந்திரமே வேண்டுமென வெறும் சுயலாபங்களுக்காக சூளுரைத்தவர்கள்,..
இன்று,.. அரிசி விலை, பருப்பு விலை என்று அழுது வடிப்பதை நீலிக்கண்ணீர் என்று சொல்வதா? அல்லது, சோறும் தேவை சுதந்தரமும் தேவையென சொன்ன எமது அரசியல் வழிமுறையை இன்றாவது ஏற்கிறார்கள் என அர்த்தமா?
இன்றைய பொருளாதார நெருக்கடிகளை சகல மக்களும் எதிர்கொள்ளும் அன்றாட இடர்களில் ஒன்றாக எண்ணியே நாம் துயர் கொள்கிறோம்.
விலை வாசி உயர்வாலும், பொருட்களுக்கான தட்டுப்பாடுகளாலும் தொடர்ந்தும் எம் தேசம் வீழ்ந்து கிடக்காது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி முரண்பாடுகளும், வழமையான ஆட்சி மாற்ற கனவுகளும், குழப்பங்களும் அரசியல், பொருளாதார மாற்றங்களை தந்து விடாது.
சகல மக்களினதும் பொருளாதார மீட்சியே இன்று அவசியம், நலிவடைந்த மக்களின் நம்பிக்கை குரலாகவும், தமிழர் தேசத்தின் தலை நிமிர்வு நோக்கிய செயலாகவும், உழைக்கும் மக்களின் உணர்வாகவும், ஜனநாயக முற்போக்கு சக்திகளின் வழி காட்டலாகவும், இன்று நாமே செயலாற்ற வேண்டிய கட்டாய கட்டளையை வரலாறு எம் மீது சுமத்தியுள்ளது,.
உழைக்கும் மக்களின் உரிமைகள் வெல்லட்டும்!
தமிழர் தேசம் தலை நிமிரட்டும்!!
சகல மக்களினதும் சம கால இடர்கள் நீங்கட்டும்!!!
நாம் செல்லும்
பயணம் வெல்லும்!
மத்தியில் கூட்டாட்சி!
மாநிலத்தில் சுயாட்சி!!
வெல்வோம்,. முயல்வோம், உளம் சோரோம்” என்று தெரிவித்துள்ளார்.