லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் கிழக்கு பகுதியில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு…!!
04.10: கிழக்கு பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாகவும் 27 பேர் காயமடைந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஒரு மாதத்தில் தினசரி பதிவுபடி அதிக இறப்பு எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்திவ்கா கோக் ஆலை மீது ரஷிய படைகள் வெடிகுண்டுகளை வீசியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்ததாக ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார்.
03.20: போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேற கூடுதல் ஒருங்கிணைப்பு மனிதாபிமான பாதைகளை அமைக்க, ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் அனுமதிக்கும் என்று நம்புவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்து சுமார் 100 உக்ரைன் குடிமக்கள்
வெளியேற அனுமதித்தது போன்று, மேலும் பல மனிதாபிமான பாதைகளை அமைக்க இரு நாடுகளின் தலைமைகளும் ஏற்பாடு செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
02.30: உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்வதை ரஷிய படைகள் ஒரு போர் தந்திரமாக பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர் ஜெனரல் இரினா வெனெடிக்டோவா குற்றம் சாட்டி உள்ளார்.
கீவ் அருகே ரஷிய படையினர் தாக்குதலால் பேரழிவிற்குள்ளான இர்பின் நகருக்கு சென்ற அவர், உக்ரைன் மக்களை பயமுறுத்துவதற்காகவும், அவர்கள் சரண் அடையும் வகையிலும் ரஷிய படைகள் பலாத்கார நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் உக்ரைனில் தங்கியிருப்பதாகவும், ரஷியப் படைகள் திரும்பி வந்து விடுமோ என்ற பயத்தில் பேசுவதற்கு அவர்கள் அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷிய ராணுவ வீரர்களால் பலாத்காரம், சித்திரவதை மற்றும் பிற சந்தேகத்திற்குரிய போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரித்து வருவதாகவும் இரினா வெனெடிக்டோவா தெரிவித்தார்.
12.50: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை வெளியேறிய பிறகும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேலும் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக உக்ரைனில் உள்ள செஞ்சிலுவைச் சங்க தலைவர் பாஸ்கல் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
அவர்களையும் அங்கிருந்து வெளியேற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆனால் அந்த பகுதிகளில் மீண்டும் தீவிரமான சண்டை தொடங்கியதற்கான அறிகுறிகள் கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
03.05.2022
21.00: இந்தியா, டென்மார்க் நாட்டு பிரதமர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அந்த கேள்விக்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, நாங்கள் உக்ரைன் விவகாரம் குறித்தும் பேசினோம். உக்ரைனில் சண்டையை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியில் பிரச்சினையை தீர்க்கும்படி நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் என தெரிவித்தார்.
17.45: உக்ரைனில் நடைபெறுவது கொடூரமான மற்றும் புத்தியில்லாத போர் என போப் பிரான்சிஸ் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
நான் இப்போதைக்கு கீவ் செல்லவில்லை. நான் போக வேண்டிய இடம் கீவ் இல்லை. நான் முதலில் மாஸ்கோ தான் செல்ல வேண்டும். புதினை சந்திக்க வேண்டும் என்றார்.
13.30: உக்ரைனுக்கு எதிரான போரில் 2 லட்சம் சிறுவர்கள் உள்பட 10 லட்சம் பேரை சிறை பிடித்து அழைத்து வந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸ்க் தெரிவித்துள்ளது.