;
Athirady Tamil News

லைவ் அப்டேட்ஸ்: ஐ.நா, செஞ்சிலுவை சங்கத்தின் உதவியால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மரியுபோல் நகரத்தில் இருந்து வெளியேற்றம்- ஜெலன்ஸ்கி…!!

0

14.06: ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதா உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரத்தில் உள்ள உருக்கு ஆலையில் பொதுமக்கள் பதுங்கியிருப்பதால், அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வரை ரஷியா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

12.06: ரஷிய ராணுவம் கணினி உதவியுடன் கூடிய உருவகப்படுத்தப்பட்ட அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. எதிரிகளின் நிலப்பரப்புகளில் எங்கு தாக்குதல் நடத்தலாம், எதிர் தாக்குதலை எப்படி சமாளிக்கலாம், அணு ஆயுத தாக்குதல் மூலம் ஏற்படும் கதிர்வீச்சு, ரசாயன ஆபத்துகளில் எப்படி செயலாற்றலாம் என்றும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

9.40: போரில், ரஷிய வீரர்களை கொல்வதற்கு உக்ரைனியப் படைகளுக்கு அமெரிக்க உளவுத்துறை உதவியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய துருப்புகளின் இருப்பிடம், ரஷியாவின் நடமாடும் ராணுவ தலைமையகம் உள்பட விவரங்கள் குறித்து உக்ரைனுக்கு அமெரிக்க உளவுத்துறை தகவல்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

06.40: உக்ரைனில் உள்ள 6 ரயில் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், உக்ரைன் படைகளுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை வழங்க இந்த ரயில் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மரியுபோலில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றத்தை அனுமதிக்க ரஷியா போர் நிறுத்தத்தை அறிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

05.20: ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட தென்கிழக்கு நகரமான மரியுபோல் உள்பட நான்கு நகரங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட உக்ரைன் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐநா மனிதாபிமான அமைப்பின் தலைவர் ஓஸ்னாட் லுப்ரானி தெரிவித்துள்ளார்.

மரியுபோல், மன்ஹுஷ், பெர்டியன்ஸ்க், டோக்மாக் மற்றும் வாசிலிவ்காவைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் தாங்கள் அணிந்திருந்த ஆடைகளைத் தவிர வேறெதுவும் இல்லாமல் வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.

03.50: மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை அமைந்துள்ள பகுதியில் ரஷிய படையினருக்கும், உக்ரைன் ராணுவ வீரர்களுக்கும் இடையே 2வது நாளாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாக உக்ரைன் ராணுவ தளபதி டெனிஸ் புரோகோபென்கோ தெரிவித்துள்ளார்.

எதிரிகளின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்த ரத்தம் சிந்தும் இந்த சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தமது வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

02.40: மரியுபோல் நகரில் உள்ள அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை பகுதியில் காயமடைந்த நிலையில் பதுங்கியிருக்கும் உக்ரைன் மக்களை காப்பாற்ற உதவுமாறு, ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

குட்டரெஸ் உடன் தொலைபேசி மூலம் பேசிய அவர், ஆபத்தில் உள்ள எங்களது மக்களின் உயிர்கள் எங்களுக்கு முக்கியம் என்றும், அவர்களை காப்பாற்ற உதவுமாறு கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் உருக்கு ஆலை பகுதியில் இருந்து நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்களை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றதற்காக ஐ.நா. மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கும் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

01.30: உக்ரைனில் ராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனை கைப்பற்றும் ரஷியாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்புகள் மற்றும் போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட ராணுவம் அல்லாத இலக்குகளை குறி வைத்து ரஷிய படைகள் வெடி குண்டு மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

12.20: உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அந்த பிராந்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அந்த பகுதியில் இதுவரை மீட்கப்பட்டுள்ள மொத்த உடல்களின் எண்ணிக்கை 1,235 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் ரஷிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும், இன்னும் 282 உடல்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

04.05.2022

22:00: உக்ரைனுக்கு அதிக அளவில் கனரக ஆயுதங்களை வழங்குவதற்காக ஜெர்மனி, பெல்ஜியம் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுடன் இணைந்து செயலாற்ற முடியுமா? என்பது குறித்து நெதர்லாந்து ஆராய்ந்து வருகிறது.

21:30: ரஷியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து, ஜி7 அமைப்பின் மற்ற நாடுகளுடன் இந்த வாரம் பேச உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

19:30: உக்ரைன் ராணுவத்திற்காக ஆயுதங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்லும் மேற்கத்திய நாடுகளின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.

18:30: உக்ரைன்-ரஷிய போர் தீவிரமடைந்துள்ள நிலையில், பெலாரஸ் திடீரென ராணுவப் பயிற்சியை தொடங்கி உள்ளது. ராணுவத்தின் திறன் மற்றும் தயார் நிலையை மதிப்பிடுவதற்கே இந்த பயிற்சி நடத்தப்படுகிறது என்றும், எந்த அண்டை நாடுகளையும் அச்சுறுத்தாது என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறி உள்ளார்.

18:00: ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா கேட்டுக்கொண்டுள்ளார். ரஷியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்பெர்பேங்க் மற்றும் இரண்டு பெரிய வங்கிகள், ஸ்விப்ட் வங்கி பரிவர்த்தனை முறையிலிருந்து துண்டிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

17:00: உக்ரைன் போரின் தாக்கம், உலக அளவில் பசி பட்டினியை அதிகரிக்கச் செய்யும் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு உள்நாட்டு போர்கள், மோசமான வானிலை மற்றும் பொருளாதார சிக்கல்களால் உணவு பற்றாக்குறையை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை 19.3 கோடியாக அதிகரித்தது என்றும், உக்ரைன் போர் தொடர்பாக அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், நிலைமை மேலும் மோசமடையும் என்றும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

15.00: ரஷியா கைப்பற்றிய உக்ரைன் கிழக்கு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அரசாங்கத்தை நிறுவ அந்நாடு முயற்சித்து வருவதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது. அந்த பகுதிகளில் வணிக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ரஷ்ய ரூபிளை பயன்படுத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.