பொதுத்தேர்வில் முதல் இடம் பிடித்தால் ஹெலிகாப்டர் சவாரி பரிசு – சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு…!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள பலராம்பூரில் தனது தொகுதிவாரி மக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல் மந்திரி பூபேஷ் பாகல் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் பிடிக்கிற மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் சவாரி பரிசாக வழங்கப்படும். இதே வகுப்புகளில் மாவட்டங்களில் முதல் இடம் பிடிப்போருக்கும் இந்த ஹெலிகாப்டர் சவாரி காத்திருக்கிறது.
குழந்தைகளுக்கு உத்வேகம் அளிக்கவும், ஊக்குவிக்கவும் இந்த ஹெலிகாப்டர் சவாரிகளை மாநில அரசு வழங்கும்.
முதல்-மந்திரியின் ஹெலிகாப்டர் சவாரி மூலம் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் இடம் பெற்றவர்கள் புதிய உத்வேகம் பெறுவார்கள்.
ஹெலிகாப்டர் பயணம், குழந்தைகளின் மனங்களில் வாழ்க்கையிலும் விண்ணுயரப் பறக்கும் விருப்பத்தை வளர்க்கும் என்பது எனது நம்பிக்கை. அவர்கள் லட்சியத்தை அடைவதற்காக தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வார்கள் என்றும் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.