திருப்பதியில் மழையால் சேதமடைந்த ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை திறப்பு…!!
திருப்பதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புயல் சின்னம் ஆந்திராவில் கரை கடந்தது. இதனால் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
பலத்த மழையினால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதை சேதமடைந்தது. பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்து மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
இதனால் பக்தர்கள் நடைபாதையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு மலை பாதை சீரமைக்கும் பணி நடந்தது. முதலில் அலிபிரி நடைபாதை திறக்கப்பட்டது.
நடைபாதையில் கடந்த 7 மாதங்களாக சீரமைப்பு பணி நடைபெற்றது. ரூ.3.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை நேற்று திறக்கப்பட்டது.
ஏற்கனவே அலிபிரி நடைபாதை பயன்பாட்டில் உள்ளது. ஸ்ரீவாரி மெட்டுபாதை திறக்கப்பட்டதால் கூடுதலாக நடைபாதை பக்தர்கள் வரும் வசதி ஏற்பட்டுள்ளது. நேற்று இந்த பாதையில் 5 ஆயிரம் பக்தர்கள் சென்றனர்.
திருப்பதி பஸ் நிலையத்தில் இருந்து சந்திரகிரி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வரை செல்ல திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நடைபாதையாக தரிசனத்திற்கு வர விருப்பமுள்ள பக்தர்கள் இலவச பஸ்சில் சந்திரகிரி வரை சென்று அங்கிருந்து ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
3.91 கோடி உண்டியல் காணிக்கை
திருப்பதியில் நேற்று 59,528 பேர் தரிசனம் செய்தனர். 29,995 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 3.91 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.