சுன்னாகத்தில் வீடொன்றுக்கு மின் துண்டிப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு!!
எந்தவிதமான முன் அறிவித்தாலும் இன்றி , காரணங்கள் எதுவும் இன்றி தமது வீட்டுக்கான மின்சாரத்தினை மின்சார சபையின் சுன்னாக கிளையினர் துண்டித்துள்ளதாக குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றின் மின்சாரத்தினை கடந்த புதன்கிழமை மின்சார சபையினர் துண்டித்துள்ளனர்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ தேவைக்காக எம்முடைய வீட்டினை ஒருவரிடம் பொறுப்பாக வைத்து , அவரிடம் இருந்து பணத்தினை பெற்றுக்கொண்டோம்.
எண்களின் வீட்டினை பொறுப்பாக வாங்கிக்கொண்டு பணத்தினை கொடுத்த நபர் , தற்போது எங்களிடம் இருந்து பணத்தினை வாங்காது , வீட்டினை முழுமையாக கையகப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று , எம்மை மிரட்டி , எமது வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து விட்டு சென்று இருந்தனர். அது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் வழங்கி இருந்தோம். அது தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அது தொடர்பில் பொலிசாரிடம் வினாவிய போது , விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கூறி வருகின்றனர்.
எமக்கு அவர்களினால் அச்சுறுத்தல்கள் இருப்பதனால் எமது வீட்டுக்கு பாதுகாப்பு கமராக்களை தற்போது பொறுத்தியுள்ளோம்.
இந்த நிலையிலையே கடந்த புதன்கிழமை மின்சார சபையினரால் எமது வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் மின்சார சபையினரிடம் கேட்ட போது , எமக்கு பணம் தந்தவர் தனது பொறுப்பிலையே வீடு உள்ளதாகவும் , அந்த வீட்டிற்கு மின் இணைப்பு தேவையில்லை என கூறியதால் தாம் மின் இணைப்பை துண்டித்ததாக எமக்கு கூறினார்கள்.
ஆனால் இன்று வரை எமது பெயரிலையே மின் பட்டியல் வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும் போது , எம்மிடம் அது தொடர்பில் கேட்காது எவ்வாறு மின்சாரத்தை துண்டித்தீர்கள் என கேட்டதற்கு , பதில் அளிக்காமல் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஊடாக எம்மை வெளியில் அனுப்பினார்கள்.
தற்போது எமது வீட்டுக்கு மின்சாரம் இல்லாமையால் , குழந்தையுடன் வாழும் நாம் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்.
அதேவேளை எமது பாதுகாப்புக்காக பொருத்திய பாதுகாப்பு கமராக்கள் மின்சாரம் இல்லாமையால் , செயற்படாமல் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்டுத்தி , எமது குடும்பத்தினருக்கு ஏதுனும் ஆபத்து விளைவிக்க கூடும் என அச்சமும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”