நைஜீரியாவில் இருந்து பிரிட்டன் வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு- தனிமை வார்டில் வைத்து சிகிச்ச..!!
பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், நைஜீரியா நாட்டிற்கு சென்று வந்த நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குரங்கு அம்மை என்பது பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் ஆகும். சமீபத்தில் நைஜீரியா சென்று வந்தவருக்கு இந்நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
‘குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று ஆகும். இது மனிதர்களிடையே எளிதில் பரவாது. பெரும்பாலும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டால் சில வாரங்களில் குணமடையும். இருப்பினும், சில சமயம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நோய் மக்களிடையே எளிதில் பரவாது என்றும், பொது மக்களுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த ஆபத்து மிகக் குறைவு என்றும் சுகாதார பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி கொலின் பிரவுன் கூறி உள்ளார்.
பாதிக்கப்பட்டவருக்கு செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார ஆலோசனைகளை வழங்க உள்ளனர். குறிப்பாக, பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் அமர்ந்து பயணித்தவர்ளைத் தொடர்புகொள்ள உள்ளனர்.
காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குளிர் மற்றும் சோர்வு ஆகியவை இந்நோய் பாதிப்பின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும். சில நேரங்களில் உடலில் அரிப்பு ஏற்படலாம். பெரும்பாலும் முகத்தில் தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் அரிப்பு பரவி, புண்களை ஏற்படுத்தும்.
பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது. தோலில் ஏற்படும் காயங்கள், சுவாசப் பாதை, கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாக இந்த வைரஸ் நுழையும்.
பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு முதன்முதலில் 2018-ல் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.