கேரள மாநிலத்தில் ஷிகெல்லா வைரசை தொடர்ந்து குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல்…!!
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷிகெல்லா வைரஸ் பரவி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது.
இந்தநிலையில் தற்போது புதிய வகை காய்ச்சல் பரவி மக்களை பீதியடையச் செய்துள்ளது. இந்த காய்ச்சல் 5 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளை தாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காய்ச்சலுக்கு முன் அறிகுறியாக அதிக உடல் வலி, சோர்வு மற்றும் மூட்டு வலி ஆகியவை ஏற்படுகின்றன. தொடர்ந்து காய்ச்சலுடன் உடலில் சிவப்பு நிறத்தில் சிறிய தடிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் இதனை தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர்.
இந்த நோய் பாதிப்புக்கு உள்ளான சிறுவர்-சிறுமிகள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் கொல்லம், ஆரியங்காவு, நெடுவத்தூர், அஞ்சால், பகுதிகளில் அதிகமாக பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து அந்தப்பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் உள்ள அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன.
தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதிக நீரை பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.