2 இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு…!!
இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி குஜராத்தில் ஆதிவாசி சத்தியகிரகா பேரணி என்ற பழங்குடியின மக்களுக்கான பேரணியை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றார். அதற்கு முன் குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அவர் குஜராத்தில் செய்ததை தான் இப்போது நாட்டிற்கு செய்துகொண்டிருக்கிறார். இதற்கு குஜராத் மாடல் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.
அவர் என்ன செய்கிறார் என்றால், இரண்டு இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்களுக்கான இந்தியா. அதாவது பணம், அதிகாரம் கொண்டவர்களுக்கான இந்தியா. மற்றொரு இந்தியா சாதாரண மக்களுக்கானது.
காங்கிரஸ் இரண்டு இந்தியாவை விரும்பாது.
பாஜக மாடலின்படி நீர், நிலம், காடு உள்ளிட்ட வளங்கள் பழங்குடியின மக்கள் மற்றும் பிற ஏழை மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு பணக்காரர்களுக்கு தரப்படுகிறது. மேலும் பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் இந்த ஆட்சியில் பறிபோனது.
பாஜக அரசு நமக்கு எதையும் தராது, அதற்கு பதில் உங்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துகொள்ளும். பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பால் சாலை, பாலம், கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை குஜராத்தில் உருவாக்கியுள்ளனர். இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல கல்வியையோ, ஆரோக்கியத்தையோ கூட தராமல் மோடி அரசு ஏமாற்றுகிறது.
கொரோனா பெருந்தொற்றின்போது, குஜராத்தில் 3 லட்சம் மக்கள் இறந்தபோது பிரதமர் மாடியில் இருந்து தட்டுகளில் ஒலி எழுப்பச்சொன்னார். மொபைலில் இருந்து வெளிச்சம் அடிக்க சொன்னார். கங்கை நதி முழுவதும் இறந்த சடலங்கள் மிதந்தன. இந்தியாவில் 50 முதல் 60 லட்சம் மக்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.