கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்…!!
உலகமெங்கும் கொரோனாவை பரப்பிய சீனா, தற்போது அந்த தொற்றின்பிடியில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலையில் அங்கு ‘ஜீரோ கோவிட்’ கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது. ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் இதன் நோக்கம் ஆகும். இதற்காக கடுமையான ஊரடங்குகள், பொது முடக்கங்கள் ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அமலில் உள்ளது.
ஹாங்சோ நகரில் செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இயல்பு வாழ்வுக்கு வேட்டு வைத்துள்ளன.
இதனால் சீனாவின் ‘ஜீரோ கோவிட்’ கொள்கைக்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:-
நாம் அனைவரும் அறிந்தபடி, கொரோனா வைரஸ் உருவாகி அதன் நடத்தையை மாற்றி மேலும் பரவுகிறது. தனது நடத்தையை அது மாற்றுகிறபோது, நீங்கள் (சீனா) உங்கள் நடவடிக்கைகளை மாற்றுவது மிகவும் முக்கியம்.
நாம் ஜீரோ கோவிட் கொள்கை யுக்தி பற்றி பேசும்போது, எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கிற வைரசின் நடத்தையை கவனத்தில் கொண்டு, இது நிலையானது என நாங்கள் கருதவில்லை. குறிப்பாக, நாங்கள் வைரசைப்பற்றிய அறிவையும், புரிதலையும் பெற்றிருக்கிற நிலையில், அவ்வாறு கருதவில்லை.
நல்ல வழிகள் இருக்கிறபோது, மற்றொரு யுக்திக்கு மாறுவது மிகவும் முக்கியம். இந்த பிரச்சினை பற்றி நாங்கள் சீன நிபுணர்களிடம் விவாதித்தோம்.
அப்போது சீனாவின் அணுகுமுறை நிலையானதாக இருக்காது என்பதை சுட்டிக்காட்டினோம். வைரசின் நடத்தையை கருத்தில்கொண்டு, ஒரு மாற்றம் முக்கியமானது என்று நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே சீனாவில் நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் 1,847 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானோரில் பெரும்பாலோர் ஷாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஆனால் சீனாவிற்கான உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல், அந்த நாட்டில் எதிர்ப்புக்கு வழி வகுத்துள்ளது.
அங்குள்ள சமூக ஊடகமான ‘வெய்போ’வில் உலக சுகாதார அமைப்புக்கு எதிராக பதிவுகள் வெளியாகி உள்ளன. ஒரு பதிவில், “நம் நாட்டின் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு கொள்கைகளை சிதைக்கிற, சந்தேகிக்கிற, மறுக்கிற எந்தவொரு வார்த்தைகளுக்கும் எதிராக உறுதியுடன் போராடுங்கள். உலக சுகாதார அமைப்பு வீழ்க” என கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பதிவு, பதிவாளரின் தனியுரிமை அமைப்பை பயன்படுத்தி உலக சுகாதார அமைப்பினால் நீக்கப்பட்டுள்ளது.