எமது கடல்வளங்களையும், சூழலையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் !! (படங்கள்)
தீவகத்தை வாழ்விடமாகக் கொண்ட எமக்கு அன்றாடம் தொழில் செய்வதற்கான கடற்பரப்பு மிகவும் குறுகியதாகும்.
எமது தொழிலாளர்களின் தொகைக்கு இந்தக் களக்கடற் பரப்பும், தீவகக் கடல்நீரேரியும் போதிய அளவாக இல்லை என்பதை நாம் அறிவோம்.
குறிப்பாக, பருத்தியடைப்பு, ஊறுண்டி, எழுவைதீவு, பருத்தீவு, அனலைதீவு, புளியந்தீவு, நயினாதீவு, குறிகாட்டுவான், ஈச்சாமுனை, பல்லதீவு, ஊரதீவு, கண்ணாத்தீவு, துறையூர், சுருவில், தணுவில், மெலிஞ்சிமுனை ஆகிய கரையோரப் பிரதேசங்கள் சூழவுள்ள கடல்நீரேரியானது ஆழம் குறைந்த களக்கடல் மட்டுமல்லாது, பாக்கு நீரிணை வழியாக உள்ளே வந்துபோகும் பருவகால மீனினங்களைப் பெரிதும் நம்பியதான வளங்களாகும்.
இந்தக் கடல் நீரேரிக்கு மூன்று பிரதான வழிகளால்தான் பாக்குநீரிணை வழியான பருவகால மீன்கள் வந்துசெல்கின்றன.
1. ஊறுண்டிக்கும், எழுவைதீவு வடக்கு முனைக்கு ஊடாகவும்,
2. எழுவைதீவு தெற்குமுனை, பருத்தீவு ஊடாகவும்,
3. புளியந்தீவு, நயினாதீவு மேற்கு முனைக்கு ஊடாகவும்.
இதில் பெருமளவான மீன்கள் வந்திறங்கும் வழியானது 2ஆவதாகக் குறிப்பிடப் பட்டுள்ள எழுவைதீவு தெற்குமுனைக்கும், பருத்தீவுக்கும் ஊடான வழித்தடமாகும். நடுவுகல் என்ற அதிக நீரோட்டம் கொண்ட இந்தப் பரப்பினூடாக எல்லாவகை மீன்களும் உள்க்கடலுக்கு வருகை தருவதற்கான சாத்தியப் பாடுகளைக் கொண்டதாகும்.
இப்படி உள் நோக்கி வந்தேறும் மீன்களின் தற்காலிகத் தரிப்பிடமாகத் திகழ்வது பருத்தீவு கிழக்குப்பகுதித் திடலாகும்.
இந்தப் பகுதி பல்வகை நிலத்தடி வளங்களையும், சதுப்பு நிலத்தையும், அடர்த்தியான, அதீதமான பசுமைத் தாவரங்களையும் கொண்டதாகும்.
இதனால் இந்தப் பகுதி வந்தேறும் மீன்களால் மட்டுமல்லாது, நிரந்தர வாழ்விடங்களாகக் கொண்ட மீனினங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். இப்பகுதி மீனினங்களின் மேய்ச்சல்த்தறை மட்டுமல்லாது, இனப்பெருக்கத்துக்கான ஒதுக்குப்புறமாகவும், பாதுகாப்பான திடலாகவும் அமைந்திருக்கின்றது.
மிகவும் அதிகளவான கணவாய், செந்நகரை, கொய், திருவன், கயல், குளுவாய்நண்டு, வெள்ளை நண்டு இனவிருத்தி காணும் வளமான பகுதி இதுவாகும். தவிரவும் பருத்தீவின் தென்கிழக்கு முனையின் மணற்தீடையானது அதிக பொருளாதார வருவாயைத் தரும் கிழக்கன் மீனினங்களின் அன்றாட மேய்ச்சல்த்தறையுமாகும்.
மேற்படி கரையோரக் கிராமங்களுக்கு அன்றாட வாழ்வாதாரங்களை வழங்குவதில் பருத்தீவுக் கடற்பகுதி பெரும் பங்கை வகிக்கிறது என்பதை அனுபவம் வாய்ந்த மூத்த தீவக மீனவர்கள் அறிவார்கள்.
இப்படி எமது தீவக மக்களின் வாழ்வாதாரத்தின் பெரும் வரமாகத் திகழக்கூடிய பருத்தீவின் கிழக்குப் பகுதியை முற்றுமுழுவதுமாக தனியார் அட்டைப் பண்ணைகளால் அடைத்து வைத்து, எமது வாழ்வாதாரத்தில் மண்ணை அள்ளிப் போடுகிறார்கள்.
இந்த அட்டைப்பண்ணை அமைத்ததில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது. இது ஒரு மக்கள் விரோதச் செயலாகவே காணப் படுகின்றது.
எமது மக்களுக்கு அன்றாடம் கிடைக்கக்கூடிய ஒருபிடி சோற்றையையும் தட்டிப் பறிக்கும் மனச்சாட்சியற்ற செயலாகும்.
எமது மக்களின் பசித்த வயிற்றில் ஓங்கியடிக்கும் இத்தகைய பண்ணைச் செயற்பாடுகளுக்கு யார் அனுமதி வழங்கினார்கள். ஆளும் கட்சியின் முழுமையான ஆதரவுடன் இந்த நாசகார செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
அவர்களே எமது மக்கள் முன் பதில் சொல்லக் கடமைப் பட்டவர்கள் ஆவார்கள்.
தவிரவும்,
மேற்படி அட்டைப்பண்ணை எந்தவித நிபந்தனையுமற்று உடனே அகற்றப் பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து,
எமது ஒருமித்த, ஐக்கியப்பட்ட குரல்களை உயர்த்தி, எமது வாழ்வாதார, பாரம்பரிய வளங்களை மீட்போம் வாருங்கள் மக்களே!
கருணாகரன் குணாளன் – பொருளாளர் தீவக சிவில் சமூகம்