;
Athirady Tamil News

‘ரணிலையும் புதிய அரசையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ !! (வீடியோ)

0

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க எடுத்த முடிவானது நடைமுறைக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். ஆகவே புதிய பிரதமர் ரணிலையோ புதிய அரசையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் கூறினர்

கொழும்பில் நேற்று(12) ஏற்பாடு செய்திருந்த விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை கூறியிருந்தனர். இதன்போது ஓமல்பே சோபித தேரர் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்க எடுத்துள்ள தீர்மானமானது சட்ட முறைமைக்கு, அரசியல் அமைப்பிற்கும், கொள்கைக்கும் முற்றிலும் முரணான ஒன்றாகும். ரணிலை பிரதமர் பதவிக்கு நியமிக்க எந்த தகுதியும் அவருக்கு இல்லை. மக்கள் ஒரு தீர்வை கேட்டும் போது இவர்கள் வேறு தீர்வை கொடுக்கவே நினைக்கின்றனர். ரணில் விக்கிரமசிங்க மக்களின் அன்பையும் கெளரவத்தையம் பெற்றுக்கொண்ட தலைவர் அல்ல.

பாராளுமன்றத்தையும் ஒரு தேசிய பட்டியல் எம்.பியாகவே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். ஆகவே மக்கள் ஆணையால் தோற்கடிக்கப்பட்ட நபர். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தலைவர் மற்றும் மக்களின் ஆதரவை வென்ற தலைவரே வேண்டும் என்பதே மாநாயக தேரர்களின் கோரிக்கையாகவும். ஆனால் இவர் ராஜபக் ஷர்களை பாதுகாக்கும் தனிப்பட்ட நோக்கத்திற்காகவே அதிகாரத்திற்கு வருகின்றார். ஆகவே இது பாராளுமன்றத்தின் தெரிவோ அல்லது எதிர்க்கட்சியின் தெரிவோ அல்ல.

ராஜபக் ஷர்களின் விருப்பத்திற்கு அமைய நியமிக்கப்படும் நபராகும். ஆகவே இந்த நியமனம் முற்றுமுழுதாக சட்டத்திற்கு முரணானது. ஜனாதிபதி பாரதூரமான தவறை செய்கின்றார். இவ்வாறு தவறுகள் தொடர்ந்தால் மக்களின் ஆணை தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டால் மிக மோசமான விளைவுகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்பதை ஜனாதிபதிக்கு எச்சரிக்க விரும்புகின்றோம் என்கிறார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கூறுகையில், நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இதுவல்ல. இந்தத் தீர்மானமானது மக்கள் ஆணையை மிக மோசமானதாக பாதிக்கும் என்பதே எமது கருத்தாகும். மக்களினால் நிராகரிக்கப்பட்ட, சுயாதீனமற்ற நபர் ஒருவரை பிரதமர் ஆசனத்திற்கு கொண்டுவரும் ஜனாதிபதியின் முயற்சியையும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டையும் மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள் என்பதை வெளிப்படையாக கூறுகின்றோம்.

நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்காது மேலும் நாசமாக்கும் செயற்பாடுகளே இவையாகும். இந்த நாடகத்தை ஏற்றுகொள்ள முடியாது. நாட்டின் இப்போதைய குழப்பக்கார நிலைமையை மாற்றி சரியான பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றால் முறையான தீர்வுகளை வழங்க வேண்டும். நாட்டில் புதிய பொறிமுறையை ஒன்றினை உருவாக்காது வழமையான அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கக்கூடாது. ஆகவே புதிய பிரதமர் ரணிலையோ புதிய அரசையோ நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்கிறார்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.