’ரணில் -கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வாகாது’!! (வீடியோ)

ரணில் விக்கிரமசிங்கவும், கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னெடுக்கும் மாளிகை சூழ்ச்சிகள் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு அல்ல. மாறாக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். ஆனால் ராஜபக் ஷர்களை காப்பாற்றவே ரணில் அதிகாரத்தை பெற்றுக்கொள்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகுகின்றது. ஆனால் கோட்டாபய ராஜபக் ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது எடுத்துள்ள தீர்மானத்தின் மூலம் வெளிப்படுவது என்னவென்றால், நாட்டு மக்களின் உண்மையான ஆணை என்ன என்பது குறித்து சிறிதும் சிந்திக்காது அதற்கு செவி சாய்க்க தயார் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க எப்போதுமே ராஜபக் ஷ குடும்பத்தை காப்பாற்றும் நபராகவே செயற்பட்டார். இப்போது அவர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதும் ராஜபக் ஷர்களை காப்பாற்றவேயாகும். அதேபோல் ராஜபக் ஷர்களும் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாவலர்கள்.
இவர்களின் ஊழல் மோசடிகள் குற்றங்கள் தொடர்பில் மிகப்பெரிய போராட்டமொன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கு செவிமடுக்காது கோட்டாபய ராஜபக் ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் இப்போது எடுத்துள்ள தீர்வு என அவர்கள் நம்பும் விடயமானது மக்கள் ஒருபோதும் நம்பப்போவதில்லை.
ரணில் கோட்டாவையும், கோட்டா ரணிலையும் நம்புகின்றனரே தவிர வேறு எவருமே இவர்களின் மாளிகை சூழ்ச்சியை நம்பப்போவதில்லை. இந்த மாற்றம் மக்கள் எதிர்பார்த்த மாற்றமல்ல, எனவே மாளிகை சூழ்ச்சிகள் பிரச்சினைக்கு தீர்வு அல்ல. மாறாக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்கிறார்.