லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்- ரஷியாவிற்கு ஐ.நா.சபை வலியுறுத்தல்…!!
13.00: உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் தொடங்கியதில் இருந்து ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார விவகாரங்கள் குறித்த கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின், ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளால் பல நாடுகள் உணவுத் தட்டுப்பாடு அபாயத்தில் உள்ளன என்றார்.
06.50: உக்ரைனுக்கான நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவி வழங்குவது போரை மேலும் தீவிரப்படுத்தும் என்று ரஷியாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் நேட்டோ அமைப்பிற்கும், ரஷியாவிற்கும் இடையேயான மறைமுகமாக போர், தற்போது வெளிப்படையாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக புதினின் நெருங்கிய கூட்டாளியான டிமிட்ரி மெட்வெடேவ், குறிப்பிட்டுள்ளார்.
04.10: ரஷிய அதிபர் புதினுடன் பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டு தொலைக்காட்சிக்கு ஒன்று பேட்டி அளித்த அவர், ரஷிய ராணுவம் எங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார். நாங்கள் ரஷியா மீது படையெடுக்கவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.
02.40: உக்ரைன் பள்ளிகள் மீது குண்டுகள் வீசிவது நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. ராணுவ நோக்கங்களுக்காக பள்ளிகளை பயன்படுத்துவது கண்டித்தது என்றும், உக்ரைனில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் கனரக பீரங்கி மற்றும் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெடிகுண்டுகள் வெடித்து சிதறுவதாகவும்
ஐ.நா குழந்தைகள் நிதிய துணை நிர்வாக இயக்குனர் உமர் அப்டி குற்றம் சாட்டி உள்ளார்.
01.20: ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ரவீந்திரா, உக்ரைன்-ரஷியா மோதல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானது மற்றும் நிலையானது என்று தெரிவித்தார். இரு தரப்பினரும், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறது என அவர் கூறினார்.
உக்ரைன் மக்களின் மனித உரிமைகள் மற்றும் பாதுகாப்பிற்கு, இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், இந்த போரின் தொடக்கத்தில் இருந்தே, அமைதி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான நடவடிக்கைகளை இந்தியா வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் உயிர்களை பலி கொடுத்து எந்த தீர்வையும் எட்ட முடியாது என்பதை இந்தியா நம்புகிறது என்றும் ரவீந்திரா தெரிவித்தார்.
12.40: உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பிற்குப் பின்னர் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த அனுமதி அளிக்கும் தீர்மானம், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் சிறப்பு அமர்வு கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 33 நாடுகளும் எதிராக 2 நாடுகளும் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.
12.5.2022
21.30: உக்ரைனின் வடக்கு செர்னிகிவ் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மீது ரஷிய படைகள் நேற்று நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த நகரம் ரஷிய எல்லைக்கு தெற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
18:00: உக்ரைனின் கீவ் நகரில் ரஷிய படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. இது தொடர்பான விசாரணையைத் தொடங்குவது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் இன்று முடிவு செய்ய உள்ளது. இது தொடர்பாக 50 நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
16:00: நேட்டோவில் இணையும் பின்லாந்தின் முயற்சியானது, ரஷியாவிற்கு அச்சுறுத்தல் என்றும், ராணுவ கூட்டணியை அதிகரிப்பதால் ஸ்திரத்தன்மை ஏற்படாது என்றும் கிரெம்ளின் மாளிகை கூறி உள்ளது.
14.39: உக்ரைனுக்கு எதிரான போரில் கைது செய்யப்பட்ட 21 வயது ரஷ்ய வீரருக்கு எதிராக முதல் போர் குற்ற விசாரணையை உக்ரைன் தொடங்க உள்ளது. வாடிம் ஷிஷிமரின் என்ற பெயர் கொண்ட அந்த வீரர், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி 62 வயது முதியவர் ஒருவரை காரில் வைத்து சுட்டுகொன்றார். பிறகு அந்த பக்கமாக சைக்கிளில் சென்ற இளைஞரையும் சுட்டு வீழ்த்தினார். இந்த குற்றச்சாட்டில் ஆயுதம் இல்லாத பொதுமக்களை கொன்றதற்காக அவர் மீது விசாரணை நடத்தப்படவுள்ளது.
12.30: ரஷ்ய படைகள் உக்ரைன் மரியுபோல் நகரை கைப்பற்றியுள்ள நிலையில், உக்ரைன் வீரர்கள் அங்குள்ள உருக்கு ஆலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களில் செர்ஹி வோல்யானா என்பவர் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்கை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்டார்.
அவர், ‘நீங்கள் வேறு கிரகத்தில் பிறந்து பூமிக்கு வந்ததாக மக்கள் கூறுவர். நான் வாழும் கிரகத்தில் பிழைத்திருப்பது கடினமாக உள்ளது. உருக்கு ஆலையில் இருந்து நாங்கள் தப்பிக்க உதவுங்கள். நீங்கள் இல்லையெனில் யார் உதவுவார்கள்?’ என கேட்டுள்ளார்.