முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி!! (வீடியோ)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை நோக்கி ” என்ற கருப்பொருளில் இடம்பெறும் இப்பேரணிகள் கிழக்கு மாகாணத்தில் இருந்து நாளை 15 ஆம் திகதியும் வடக்கு மாகாணத்தில் இருந்து நாளை மறுதினம் 16 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்பட்டு மே 18 ஆம் திகதி இரண்டு பேரணிகளும் முள்ளிவாய்க்காலை சென்றடைந்து நினைவேந்தலில் பங்கேற்கவுள்ளது.
யாழ் ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் , பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் பொது அமைப்புக்கள், சிவில் சமூகங்கள், போன்ற அமைப்புக்கள் இணைந்து பேரணியை மேற்கொள்ளவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் நாளை 15 ஆம் திகதி ஆரம்பிக்கும் பேரணி பொத்துவிலில் ஆரம்பித்து திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, களுவாஞ்சிகுடி
ஊடாக திருகோணமலை நோக்கி அங்கிருந்து முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலை சென்றடையும்.
வடக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கும் பேரணி வல்வெட்டித்துறையில் ஆரம்பித்து யாழ்ப்பாணம், தென்மராட்சி, பரந்தன், பூநகரி, வெள்ளாங்குளம், மாங்குளம் ஊடாக முள்ளிவாய்க்காலை அடையும். பிரதான வீதிகளில் நடந்தும் ஏனைய பகுதிகளில் வாகனங்கள் ஊடாகவும் இந்த பேரணி செல்லவுள்ளது.
அரசியல் தரப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மாணவர்கள், மீனவ சங்கங்கள், போக்குவரத்து அமைப்புகள் அனைவரையும் பங்கேற்க அழைக்கின்றோம் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”