வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை நிறுத்தப்படுவதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் – இந்திரஜித் குமாரசுவாமி!!
நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சியடைந்தமையே மத்திய வங்கியினால் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்குத் தீர்மானித்திருப்பதாகவும், வெகுவிரைவில் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி அறிவித்தது.
வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையை இடைநிறுத்துவதற்கு மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாட்டின் பொருளாதார நிலைவரம் குறித்த கலந்துரையாடலொன்றில் தெளிவுபடுத்துகையிலேயே முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் உரியவாறு மேற்கொள்ளப்படவில்லை என்றும், இவ்வாறு தீர்மானிப்பதற்கு முன்னதாக கடன்வழங்குனர்களுடன் இதுகுறித்துக் கலந்துரையாடியிருக்கவேண்டும் என்று சிலரால் கூறப்படுவதை ஏற்றுக்கொண்ட அவர், இருப்பினும் இவ்விடயத்தில் மத்திய வங்கியிடம் வேறு தெரிவுகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வெளிநாட்டுக்கையிருப்பு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ந்தியடைந்திருப்பதை அறிந்துகொண்ட மத்திய வங்கியின் புதிய ஆளுநர், கடன்களை மீளச்செலுத்தமுடியாத நாடாக இலங்கை மாறுவதைத் தடுப்பதற்காக வேறு தெரிவுகளின்றி இதனைச் செய்திருக்கின்றார் என்றும் முன்னாள் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை கடன்வழங்குனர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவதாகவும், இது இயல்பாகவே முன்னெடுக்கப்படும் ஓர் நடவடிக்கை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது!!
சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை ஸ்தாபிக்க கலந்துரையாடல் – பிரதமர் ரணில்!! (படங்கள்)
மேலே ரணில் கீழே பசில் – நெருக்கடி மேலும் மோசமாகும்! (வீடியோ)
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)