பா.ஜ.க. அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது: சித்தராமையா..!!
ராஜஸ்தானில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
“பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் பொருளாதார வளா்ச்சி சீர்குலைந்து விட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பொருளாதார வளர்ச்சி நல்ல நிலையில் இருந்தது. தற்போது பா.ஜனதா ஆட்சியில் 5.37 மட்டுமே இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தற்போது இருக்கும் பொருளாதார கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும், தற்போது இருக்கும் கொள்கைகயால் தான் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது என்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.
நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. பா.ஜனதா அரசு அமைந்த பின்பு வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்துள்ளது. கர்நாடக அரசியல், சட்டசபை தேர்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதுபற்றி எல்லாம் தற்போது பகிரங்கமாக எதுவும் கூற முடியாது. காங்கிரஸ் கட்சியில் ஒரு வீட்டுக்கு ஒருவர் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது குறித்து எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. அதனால் அதுபற்றி நான் பேச விரும்பவில்லை.”
இவ்வாறு சித்தராமையா கூறினார்.