எரிபொருள் விநியோகம் எப்போது வழமைக்கு திரும்பும்?
தற்போது நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பௌசர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்த இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள், எரிபொருள் விநியோக பொறிமுறை வழமைக்குத் திரும்ப நான்கு அல்லது ஐந்து நாட்களாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
வெசாக் பூரணை காரணமாக நேற்று (15) நிறுத்தப்பட்டிருந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று முதல் (16) ஆரம்பிக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும், எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டன.
இதேவேளை, மருந்து, எரிபொருள், எரிவாயு, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டுசெல்லும் லொறிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.