ராமரை தொடர்ந்து கிருஷ்ணர் பிறந்த இடத்திற்கு உரிமை கோரும் இந்து அமைப்புகள்..!!
உத்தர பிரதேச மாநிலதின் ஆக்ரா நகருக்கு வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள நகரம் மதுரா. மதுராவை சுற்றியுள்ள கோகுலம், பிருந்தாவனம், கோவர்த்தனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கிருஷ்ண ஜென்ம பூமியாக உத்தர பிரதேச அரசு அறிவித்தது.
இந்நிலையில் இங்கு கிருஷ்ணர் பிறந்த இடம் என்று நம்பப்படும் ஷாஹி இத்கா மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதை நிறுத்த உத்தரவிடக் கோரி, மதுரா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட மாணவர்கள் குழு மனுத்தாக்கல் செய்துள்ளது.
கத்ரா கேசவ் தேவ் கோவிலின் 13.37 ஏக்கர் வளாகத்தில் மசூதி கட்டப்பட்டது என்றும், இங்குதான் பகவான் கிருஷ்ணன் பிறந்தார் என்று பெரும்பான்மை இந்து சமூகம் நம்புவதாக அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது
கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதியை அகற்றக் கோரி வெவ்வேறு இந்து குழுக்கள் மதுரா நீதிமன்றத்தில் தனித்தனியாக பத்து மனுக்களை தாக்கல் செய்துள்ளன.
ஒரு காலத்தில் கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டது என்று மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் ஷைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
இந்துக் கோவில் பகுதியில் உள்ள ஒரு கட்டமைப்பு கோவிலுக்கு நிகரானது,
அது மசூதிக்கு தகுதியானதல்ல என்று அவர் கூறியுள்ளார்.
வேறு எந்த மதத்தின் அடையாளமும் இல்லாத நிலத்தில் மசூதி கட்டப்பட வேண்டும் என்று குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாகவும், அந்த நிபந்தனையை மசூதி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதிக்குள் ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான வழக்கு காரணமாக, மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதி பகுதி உள்பட மதுரா மாவட்டம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு ஆக்ரா கூடுதல் காவல்துறை இயக்குநர் ராஜீவ் கிருஷ்ணா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ராஜீவ் கிருஷ்ணா அதிரடியாக எச்சரித்துள்ளார்
ஆக்ரா மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் காவல்துறைத் தலைவர்களும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படும் நபர்களை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றும், மதத்தின் பெயரால் அமைதியை சீர்குலைக்க யாரேனும் முயன்றால், அவர் உடனடியாக கைது செய்யப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கிருஷ்ண ஜென்ம பூமி பகுதி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும், யாரும் கிருஷ்ண ஜென்ம பூமிக்குள் நுழைய முடியாது என்றும் ஏடிஜி தெரிவித்தார்.