;
Athirady Tamil News

ஞானவாபி மசூதியில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணையர் நீக்கம்: கோர்ட்டு அதிரடி..!!

0

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மதவழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தை சேர்ந்த பெண்கள் 5 பேர் வாரணாசி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு ஆய்வு செய்தது. கடந்த சனிக்கிழமை முதல் 3 நாட்கள் மசூதி வளாகத்தில் வீடியோ ஆய்வு பணிகள் நடைபெற்றது.

அப்போது, இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதியில் இந்து மத கடவுளான சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் ஆட்கள் நுழைய வாரணாசி கோர்ட்டு தடை விதித்தது.

ஆனால், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஞானவாபி மசூதியில் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாக வாரணாசி கோர்ட்டில் நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கோர்ட்டால் நியமிக்கப்பட்ட ஆணையர் அஜய் மிஸ்ரா தனிப்பட்ட முறையில் புகைப்பட கலைஞரை மசூதிக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததாக மற்றொரு ஆணையர் விஷால் சிங் வாரணாசி கோர்ட்டில் தெரிவித்தார்.

இதனால், மிஸ்ராவை ஆணையர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டுமென விஷால் சிங் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, ஒதுக்கப்பட்ட பணியை சரிவர செய்யாமல் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் ஆணையர் அஜய் மிஸ்ரா இந்த ஆய்வு பணியில் இருந்து நீக்கப்படுவதாக அதிரடியாக உத்தரவிட்டது.

அதேவேளை, ஞானவாபி மசூதியில் நடைபெற்ற ஆய்வு பணிகள் குறித்த அறிக்கையை சம்பர்ப்பிக்க ஆய்வு பணிகளை மேற்கொண்ட குழுவுக்கு மேலும் 2 நாட்கள் அவகாசம் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.