வடக்கில் 4ஆவது டோஸ் வழங்கல்!!
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 20 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிரப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் நான்காவது தடவை பைசர் மேலதிக தடுப்பூசி வழங்கல் திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்திக்குறிப்பில், கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 20 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மேலதிகமாக நான்காவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது (பைசர்) இவ்வாரம் முதல் வழங்கப்பட உள்ளது.
மேற்கூறப்பட்டவர்களில்; ஏற்கனவே கோவிட்-19 தடுப்பூசியை மூன்று தடவைகள் பெற்றுக்கொண்டு மூன்று மாதம் நிறைவுற்றவர்கள் மட்டுமே இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இத் தடுப்பூசியானது அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் வழங்கப்படும்.கோவிட்-19 இற்காக மூன்று தடுப்பூசிகளையும்; பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய நான்காவது தடுப்பூசியினை (பைசர்) பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் சுகாதார அமைச்சானது நாடு முழுவதும் உள்ள 20 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இத் தடுப்பூசியினை நான்காவது தடவையாக வழங்க முடிவு செய்துள்ளது.
எனவே வடமாகாணத்தில், யாழ் மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் மேற்கூறப்பட்ட 20 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிரப்பு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இத்தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன.
20 வயதிற்கு மேற்பட்டவர்களில் பின்வரும் நோய் நிலைமையுள்ளவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
1. நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நிலைமை நோயினாலோ அல்லது நோய்க்குரிய சிகிச்சையினாலோ ஏற்பட்டவர்கள்.
2. நாட்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய்நிலைமைகள்.
3. திண்ம அங்கங்கள் ( சிறுநீரகம், ஈரல், சுவாசப்பை போன்றவை); மற்றும் என்புமச்சை அல்லது ஸ்டெம் செ மாற்று அறுவை சிகிச்சைக்குட்பட்டவர்கள்.
4. புற்றுநோய் உடையவர்களில்; அதற்கான சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அதற்குரிய சிகிச்சையினை நிறைவு செய்தவர்கள்.
5. மண்ணீரல் இல்லாதவர்கள் மற்றும் மண்ணீரல் தொழிற்பாட்டு பிரச்சினை உடையவர்கள்.
6. வேறு ஏதாவது நோய் நிலைமைகளினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த நிலையில் உள்ளவர்கள் என சிகிச்சை அளிக்கும் பொது வைத்திய நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கப்படுபவர்கள்
மேற்கூறப்பட்டவர்களில்; ஏற்கனவே கோவிட்-19 தடுப்பூசியை மூன்று தடவைகள் பெற்றுக்கொண்டு மூன்று மாதம் நிறைவுற்றவர்கள் மட்டுமே இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
இக்குறிப்பிட்ட நிலைமையுடைய 20 வயதிற்க்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய மருத்துவ அறிக்கைகளையும்; தடுப்பூசி பெற்றுக்கொண்ட அட்டையிணையும் தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள மேற்கூறப்பட்ட வைத்தியசாலைகள் ஏதேனும் ஒன்றில் சமர்ப்பித்து தமக்குரிய தடுப்பூசியினை இவ்வாரம் முதல் பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் இவ்வாறான விசேட நோய்நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்பாக அறிந்த சுகாதாரப் பணியாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் அவர்கள்; தொடர்பான விபரங்களை உங்கள் பிரதேச சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு அறியத்தருமாறும், இத்தகவலை அவர்களுடைய பராமரிப்பாளர்களுக்கு தெரிவிக்கும்படியும், இந்நோயளர்களை தடுப்பூசி வழங்கும் வைத்தியசாலைகளுக்கு அனுப்ப ஊக்குவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் – என்றுள்ளது.