பாகிஸ்தானில் காட்டுத்தீ முன்பு ‘டிக்டாக்’ வீடியோ எடுத்த பெண் மாடல் சர்ச்சையில் சிக்கினார்..!!
பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலம் ஹூமைரா அஸ்கர். நடிகை மாடலான இவர் வீடியோக்களில் நடித்து அதனை டிக்டாக் வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவரை 1.10 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் ஹூமைரா அஸ்கர், காட்டுத்தீ முன்பு டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அந்த வீடியோவில் காட்டுத்தீ பற்றி எரியும்போது, அதற்கு முன்னால் ஹூமைரா அஸ்கர் ஒய்யாரமாக நடந்து செல்கிறார். அந்த வீடியோவை ‘நான் எங்கிருந்தாலும் நெருப்பு வெடிக்கும்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இஸ்லாமாபாத் வனவிலங்கு மேலாண்மை வாரிய தலைவர் ரினா சயித்கான் கூறும்போது, கவர்ச்சிகரமான வீடியோ எடுப்பதற்கு பதிலாக அவர் (ஹூமைரா அஸ்கர்) தீயை அணைப்பதற்காக ஒரு வாளி தண்ணீரை வைத்திருக்க வேண்டும்.
இந்த வீடியோக்கள் சொல்லும் செய்தி மிகவும் ஆபத்தானது. அதை கட்டுப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை ஏற்படுத்துபவர்களுக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. அதுபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் ஹூமைரா அஸ்கரின் செயல் அறியாமை மற்றும் பைத்தியக்காரத்தனம் என்று பலர் விமர்சித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஹூமைரா அஸ்கர் கூறும்போது, “காட்டுக்கு நான் தீயை வைக்கவில்லை. வீடியோக்களை தயாரிப்பதில் எந்த தீங்கும் செய்யவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. சிந்து மாகாணத்தில் 121 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் காட்டுத்தீ ஏற்படுகிறது. மேலும் சிலர் காட்டுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது.