பொருளாதார சிதைவை தடுக்க புத்திஜீவிகள் முன் வர வேண்டும்!!
நாடு பொருளாதாரத்தால் சீரழியும்போது சட்டம், நீதி, மனிதநேயம் என்பனவும் சமூக விழுமியங்களும் அழிவடைந்து போகும். எனவே தற்போதைய பொருளாதாரப் பேரிடர் காலத்தில் சமூகத்தினைக் கூட்டுச் சீர்மைப்படுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது. எனவே புத்திஜீவிகள், புலமைசார் உத்தியோகத்தர்கள் பொருளாதாரச் சிதைவைத் தடுக்கும் வகையில் மக்களுக்குப் பணிபுரிதல் அவசியம் என மருத்துவர் சி. யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரிடர் இற்றைக்கு இரு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட கொரோனா பேரிடருடன் எதிர்வு கூறப்பட்டது. இதற்கு வெறுமனே உள்நாட்டு அரசியல் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்புக் காரணங்களை மட்டும் காரணமாகக் கருதாமல் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையில் அதனை எதிர்கொள்ள உலக வல்லரசுகள் மேற்கொண்ட வர்த்தக, அரசியல் இராணுவ நடவடிக்கைகளும் காரணமாக அமைந்துள்ளன.
இதில் மிகவும் வெளிப்படையானது ரஸ்சியா உக்ரெயின் மீது மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கையாகும். இதனால் மேற்கு உலகின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க மேற்கு நாடுகள் வறிய நாடுகளைச் சுரண்டும் நடவடிக்கைகளையே மேற்கொள்ளும்.
பல நாடுகள் செயற்கையான நிதி நடவடிக்கைகளால் தமது பொருளாதாரம் தாழ்நிலை அடைவதை தடுத்து உள்ளன.
எதிர்வரும் மூன்று மாதங்களில் உலகளாவியரீதியில் பொருளாதாரத் தேக்கநிலை ஏற்படும். இந்நிலையில் பல நாடுகளில் பொருளாதார முகாமைத்துவம் இன்மையினால் நிதி நெருக்கடியும், அரசியல் குழப்பங்களும், வன்முறைகளும் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையினையே இலங்கை தற்போது எதிர்கொள்கின்றது.
எனவே புத்திஜீவிகள், புலமைசார் உத்தியோகத்தர்கள் பொருளாதாரச் சிதைவைத் தடுக்கும் வகையில் மக்களுக்குப் பணிபுரிதல் அவசியம்.
குறிப்பாக நாட்டின் பொருளாதாரச் சூழ்நிலையைத் தெரிந்தும், சமூகத்தில் கல்வியில் உயர்ந்தவர்களை உடைய தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கப் போராட்டங்களை நடாத்துவது மக்கள் விரோதச் செயற்பாடாகவே கருதப்படல் வேண்டும். மேலும் அரச அதிகாரிகள் தொழிற்சங்கப் போராட்டத்தில் சாதாரண பாமர மக்கள் போல் இணைவது முட்டாள்தனமானது.
தற்போதைய பொருளாதாரப் பேரிடரினை ஓர் பாரிய சமூக உளப்பிரச்சினையாக கருதி யுத்தம், கடல்கோள், கொரோனாத் தொற்று போன்ற சூழ்நிலைகள் போல் சமூகநலன்சார் திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பட்டினி ஏற்பட்டபோது ஆறுமுகநாவலர் அவர்களால் ஏழைமக்களுக்கு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டமை எமது வரலாறு.
அவ்வாறே இன்றும் நாம் சில சமூகச் செயற்பாடுகளை ஊக்குவித்தல் அவசியம். விவசாயம் செய்வதனை ஊக்குவித்தல் வேண்டும். கடற்றொழிலை ஊக்குவிக்க வேண்டும். ஆடு, மாடு, கோழி, வாத்து போன்ற விலங்கு வேளாண்மைகளை ஊக்குவிக்க வேண்டும். இவற்றுக்கு நாம் மானியங்கள் வழங்க வேண்டும்.
அரசியல்வாதிகளும் அரசியல் காழ்வுகளைக் களைந்து இச் சந்தர்ப்பத்தில் தவறான பாதையில் திருப்பாது பொருளாதார சமூக மேன்நிலைச் செயற்திட்டங்களுக்கு உதவல் வேண்டும். இவை யாவும் கிராமிய மட்டத்தில் நிகழ வேண்டும். வெறுமனே மேடைப் பேச்சுக்களால் பயன் ஏதுமில்லை. ஒவ்வொருவரும் தமது கிராமம்சார்ந்த பொருளாதார வளத்தை மேம்படுத்தல் அவசியமானதாகும்.
அரச உத்தியோகத்தர்களும் சில மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட மானியத்துடன் தொழில் செய்யும் சூழல் ஏற்படலாம். இத்தகைய சந்தர்ப்பத்தில் அரச நிருவாகம் சுமூகமாக இயங்குவதற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் தற்காலிகமாகத் தடைசெய்ய வேண்டிய அவசியமும் ஏற்படும். இவை தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு அறிவுரைகூற வேண்டியது புத்திஜீவிகளது கடமையாகும்.
ஒரு நாடு பொருளாதாரத்தால் சீரழியும்போது சட்டம், நீதி, மனிதநேயம் என்பனவும் சமூக விழுமியங்களும் அழிவடைந்து போகும். எனவே தற்போதைய பொருளாதாரப் பேரிடர் காலத்தில் சமூகத்தினைக் கூட்டுச் சீர்மைப்படுத்த வேண்டிய தேவை எமக்கு உள்ளது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”