குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்- பிரசாந்த் கிஷோர் பரபரப்பு ட்வீட்..!!
குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க பிரசாந்த் கிஷோர் சில யுக்திகளை வகுத்து அக்கட்சியின் தலைமையிடம் கொடுத்தார். பின் அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாகவும் பேசப்பட்டது. இறுதியில் அவர் காங்கிரஸில் இணையவில்லை என்பது உறுதியானது.
பிரசாந்த் கிஷோர் கொடுத்த பரிந்துரைகளை காங்கிரஸ் ஏற்கவிலை என்பதாலும், அவர் காங்கிரஸில் இணைவதில் சில தலைவர்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்பட்டது.
அதன்பின் பிரசாந்த் கிஷோர் புதிய அமைப்பு ஒன்றை தொடங்கி நடைபயணமாக சென்று மக்கள் குறைகளை கண்டறியப்போவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியும் ராஜஸ்தான் உதய்பூரில் சிந்தனை கூட்டம் என்று அக்கட்சியின் எதிர்காலம், வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தியது.
இந்நிலையில் தற்போது பிரசாந்த் கிஷோர் தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி சந்திக்கவுள்ள, குஜராத், இமாச்சல் தேர்தல் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
உதய்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் சிந்தனைக் கூட்டம் பற்றி கருத்து சொல்லுமாறு என்னை அடிக்கடி கேட்டு வருகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை, அந்தக் கூட்டம் அர்த்தமுள்ளதாக எந்த முடிவையும் எட்டவில்லை. காங்கிரஸ் தற்போதையே நடைமுறையையே தொடர முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் இன்னும் சிறிது காலம் நீடித்து இருக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் வரையிலாவது இந்த நடைமுறை தொடரும்.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.