கொரோனா வடு மறைவதற்குள் புதியதாக பரவும் குரங்கு அம்மை வைரஸ்..!!
கடந்த 2019-ஆம் ஆண்டு முதலில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரசில் இருந்தே உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில், குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடாவில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் சமீபத்தில் கனடாவில் இருந்து வந்துள்ளாா் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவி உள்ளதை உறுதி செய்துள்ளனர்.
அந்த நபரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குரங்கு வைரஸ் பரவி வருவது குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல், தசை வலி, முகம் மற்றும் உடலில் வீக்கம் ஆகியவையே இந்த நோய்க்கான முக்கிய அறிகுறியாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் இடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மை கொண்டுள்ளது. குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்டோர் பயன்படுத்திய பொருட்களை உபயோகிப்பதன் மூலம் பரவ வாய்ப்பு உள்ளது.
காய்ச்சல் வந்த 3 நாட்களுக்குள் சருமத்தில் கொப்புளங்கள் ஏற்படுகின்றன. குறைந்தது 6 நாட்கள், அதிகபட்சமாக 21 நாட்கள் சிகிச்சை தேவைப்படுகிறது. இந்த குரங்கு அம்மை நோய் பொதுவாக பாலியல் தொழில் செய்பவர்களுக்கு தான் காணப்படும். தற்போது இளைஞா்கள் அதிக அளவு இந்த வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குரங்கு அம்மை பாதிப்பு உள்ளவா்கள் பயன்படுத்தும் பொருட்களைக் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மையில் இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் நாடுகளிலும் மங்கி பாக்ஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மங்கி பாக்ஸ் மெல்ல மெல்ல பரவி வருகிறது. இதனால் அந்நாடுகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மங்கி பாக்ஸ் நோய் பாதித்தவர்கள், தொற்று உறுதியானதிலிருந்து சரியாக 4வது நாளில் பெரியம்மை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். மங்கி பாக்ஸை தடுப்பதில் பெரியம்மை தடுப்பூசியே நல்ல பலன் அளிக்கிறது என கூறப்படுகிறது.