குரங்கம்மை பரவுவதை தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு- மத்திய அரசு உத்தரவு..!!
ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், சுவீடன் மற்றும் அமெரிக்கா, கனடா நாடுகளில் ‘மங்கிபாஸ்’ என்று அழைக்கப்படும் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை குரங்கம்மை வைரஸ் பாதித்துள்ளது.
இங்கிலாந்தில் குரங்கம்மை பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு சின்னம்மை, பெரியம்மையை விட அளவில் பெரிய கொப்பளங்கள் உடல் முழுவதும் அதிகமாக ஏற்படும்.
இந்த நிலையில் இந்தியாவில் குரங்கம்மை வைரஸ் பரவுவதை தடுக்க தீவிர கண்கணிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்கள், துறை முகங்கள், எல்லைப்பகுதிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
குரங்கம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களிடம் வைரஸ் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மாதிரிகளை எடுத்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு நாடுகளில் குரங்கம்மை பரவி வருவதையடுத்து உலக சுகாதார அமைப்பு இன்று அவசர கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இதில் குரங்கம்மை பரவுவதை தடுப்பது, முன்னேற்படுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.