ஜனநாயக பண்போடு பயணிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம் – மணிவண்ணன்!!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு என சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து எம்மை யாரும் நீக்க முடியாது இந்த அமைப்பை தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து நாங்களும் உள்ளோம். ஒருவேளை அமைப்பில் இருந்து நீக்குவதாக இருந்தால் பொறிமுறையொன்று இருக்கின்றது அதனை சரியாகச் செய்ய வேண்டும்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து ஒழுங்காக ஜனநாயக பண்புகளோடு பயணிக்க தயாரில்லாத விரும்பாத எவரும் கட்சியிலிருந்து வெளியேற பூரண சுதந்திரம் உண்டு.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் எங்களுடன் இருக்கின்றார்கள்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது வரதராஜன் அவர்களும் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தலைவராக இருந்தனர். அதன் பின்னர் எந்தவொரு நியமனங்களும் செய்யப்படவில்லை. விரைவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினுடைய நிர்வாகம் கூட்டப்பட்டு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட வேண்டும். நிர்வாகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து விலகிக் கொள்ள முடியும் என்றார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பும் மணிவண்ணன் தரப்பும் உரிமை கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”