மக்களை முட்டாளாக்காதீர்கள் – பெட்ரோல் டீசல் விலை குறைப்பில் மத்திய அரசை சாடிய காங்கிரஸ்..!!
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து நேற்று அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயையும் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டரில், மத்தியில் பா.ஜ.க. அரசு பதவியேற்றதிலிருந்து நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நலனில் அக்கறைகாட்டி வருகிறது என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நிதி மந்திரியின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
பெட்ரோல், டீசல் மீதான மத்திய கலால் வரியை மே 2014ம் ஆண்டு காலகட்டத்தில் இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும். மே 2014-ல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3.56. பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.9.48. அதேவேளையில், மே 21, 2022 அன்று பெட்ரோல் மீதான கலால் வரி ஒரு லிட்டருக்கு ரூ.27.90. பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.18.42 உயர்த்தி, இப்போது லிட்டருக்கு ரூ.8 குறைக்கப்பட்டுள்ளது. மக்களை முட்டாளாக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார்.