;
Athirady Tamil News

தமிழ்நாட்டின் நிவாரணம் கொழும்பை அடைந்தது !!

0

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது.

அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இதில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

9,000 மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் நிவாரண தொகையில் அடங்குகின்றன.

கடந்த 18 ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் குறித்த நிவாரணக் கப்பல் பச்சைக் கொடி அசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால் மா மற்றும் மருந்துகள் உட்பட 5.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தமிழக அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிலையில், அதன் முதல் தொகுதி, நாட்டை வந்தடைந்தது.

இந்தப் பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிக்கப்படும் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.