பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியை குறைக்க வேண்டும்-ப.சிதம்பரம் கருத்து..!!
புதுடெல்லி:
மத்திய அரசு நேற்று கலால் வரியை குறைத்தது. இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம் குறைக்கப்படுள்ளது. உஜாலா திட்ட கியாஸ் சிலிண்டர்களுக்கு ரூ.200 மானியம் அளிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
இரண்டு மாதங்களில் லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்திவிட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50, டீசல் லிட்டருக்கு ரூ.7 என விலை குறைப்பது கொள்ளை அடிப்பதற்கு சமமானது.
மாநிலங்களுக்கு மத்திய நிதி மந்திரி வழங்கியுள்ள உபதேசம் அர்த்தமற்றது. மத்திய அரசு ஒரு ரூபாய் கலால் வரி குறைத்தால் அதில் 41 பைசா மாநிலங்களுக்கு சொந்தமானது. மத்திய அரசு ஒரு ரூபாய்க்கு 59 பைசாவையும், மாநில அரசு 41 பைசாவையும் குறைப்பதாகவே அர்த்தம்.
மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான செஸ் வரியை குறைப்பதே உண்மையான விலை குறைப்பாகும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.