மண் காப்போம் இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து..!!
மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நம்முடைய உடல் – மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. இவை தான் நம் வாழ்வை முடிவு செய்கிறது. தண்ணீர் மற்றும் காற்றின் தரத்தை மண் தான் தீர்மானிக்கின்றது. எனவே, மண்ணை வளமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். சத்குரு அவர்களின் மண் காப்போம் இயக்கத்திற்கு எனது மனமார்ந்த ஆதரவுகள்; வெற்றி பெற வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி கூறும் விதமாக, சத்குரு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமஸ்காரம் ஸ்ரீ யோகி ஆதித்யநாத் அவர்களே. மண் காப்போம் இயக்கத்திற்கு தாங்கள் ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி. இவ்வுலகின் உயிர்சூழலை இணைத்து வைத்திருக்கும் உயிர்ப்பான இணைப்பு – மண். இந்த இணைப்பினை வலுப்படுத்தி பேணுவது இவ்வுலகின் வருங்காலத்தினை பாதுகாக்க மிக முக்கியம்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, கோவா முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி, மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் செளபே உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தவிர உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், இசை கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் இவ்வியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மண் வளப் பாதுகாப்பிற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, ஐரோப்பா, மத்திய ஆசிய நாடுகள் வழியாக மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து வருகிறார். இம்மாத இறுதியில் அவர் இந்தியா வர உள்ளார்.